முக்கிய செய்திகள்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி வழக்கில் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.20 - சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு ஆந்திர மாநில ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  நிறுவன மோசடிகளில் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சத்யம் கம்ப்யூட்டர்ஸ். இந்த நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்கராஜூ செய்த நிதி மோசடி காரணமாக இந்நிறுவனத்துக்கு மூடும் நிலை ஏற்பட்டது. அப்போது நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து சிறப்பு அதிகாரிகளை நியமித்து வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. பின்னர் இந்நிறுவனத்தை மகேந்திரா கம்ப்யூட்டர் நிறுவனம் கையகப்படுத்தியது. 

சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடைய மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ, நிறுவன தலைமை நிதி அதிகாரி லெட்சுமணி சீனிவாஸ், முன்னாள் ஊழியர்கள் ராமகிருஷ்ணா, வெங்கடபதிராஜூ, ஸ்ரீசைலம், பவர் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவன முன்னாள் தணிக்கையாளர்கள், சத்யம் நிறுவன தணிக்கையாளர்கள் ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 10 ம் தேதி ஐதராபாத் நீதிமன்றத்தில் சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜூ சரணடைந்தார். இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த அக்டோபரில் நீதிமன்றம் நிராகரித்தது. இதன் பிறகு கடந்த ஜூலை 31 ல் அவர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ராஜூ மற்றும் 6 பேர் இப்போது ஐதராபாத் சஞ்சலகுடா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை குறித்த காலத்திற்குள் சி.பி.ஐ. தொடங்கவில்லை. இருப்பினும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுவை ஆந்திர ஐகோர்ட் நிராகரித்தது. இந்த மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதில் சி.பி.ஐ. தனது பதிலை இரண்டு வார காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: