முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில திட்டக்கமிஷன் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 12 - மாநிலத்தின் 5 ஆண்டுகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 12-வது ஐந்தாண்டு திட்டம் அமைய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கூறினார்.  சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில திட்டக்கமிஷன் கூட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி பேசியதாவது:- மாநில திட்டக்கமிஷன் முதல் கூட்டத்தில் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில திட்டக்கமிஷனில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாநில முன்னேற்றத்திற்கு வளரச்சி திட்டம் வகுத்து அதை திறம்பட செயல்படுத்துவதில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு அதை நடைமுறைப்படுத்துவதில் தன் தலைமையிலான அரசு மிகவும் ஆவலுடன் இருக்கிறது.  உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மாநிலம் எதிர்நோக்கியுள்ள சில வாய்ப்புகள் மற்றும் நெருக்கடி குறித்து திட்டக்குழு உறுப்பினர்கள் பரிசீலனையில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் பயன்பெறும் வகையில் நிலையான அதிகப்பட்ட வளர்ச்சியை அடைய எனது அரசு உறுதிபூண்டுள்ளது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மாநில வளர்ச்சி 9 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை துறைகளில் வளர்ச்சி தேசிய சராசரி வளர்ச்சியைக்காட்டிலும் குறைவாக இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதன் விளைவால் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி முதல் 4 ஆண்டுகளில் 7.8 சதவீதமாகத்தான் இருந்தது. மாநிலத்தில் சேவை துறையில் மட்டும் வளர்ச்சி அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்காது. அதனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருக்கும் முதல் நிலை மற்றும் உற்பத்தி துறைகளில் அதிக வளர்ச்சியை நாம் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்றால் சேவை துறையில் உள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சியில் உள்ள தடங்கல்களை நாம் அகற்றியாக வேண்டும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வை அகற்றி அதிக வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் முதல்நிலை துறையில் எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல்நிலை துறை வளர்ச்சியை புத்துயிரூட்ட முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தில் கடந்தாண்டு 85.35 லட்சம் மெட்ரிக் டன் உணவுதான்யம்தான் உற்பத்தி செய்யப்பட்டது. இதை முறியடித்து நடப்பு 2011-2012-ம் ஆண்டில் உணவு தான்ய உற்பத்தியை 115 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி திறன் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 200 முதல் 300 சதவீதம் வரை அதிகரிக்க நாம் இலக்கு நிர்ணயத்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாய திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை நாம் அடைய வேண்டும்.  நாட்டில் பணவீக்கத்தின் காரணமாக வருமான குறைவு ஏற்பட்டிருப்பது கருத்தில்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சமுதாயத்தில் நடுத்தர ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய அரசானது சமுதாயப் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்களை எனது அரசு எடுத்துவருகிறது. ஏழை மக்கள் தங்களுடைய வருமானத்தைக் கொண்டே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.  திட்ட அணுகுமுறையும் அதன் செயல்படுத்தும் முறையும் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். என்னுடைய அரசின் புதிய திட்டமான தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தால் கிராமப்புறங்கள், நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி அடையும். மேலும் சென்னையில் மோனோ ரயில் திட்டம், திருமழிசையில் சேட்டிலைட் நகரம், கிராமப் புறங்களில்  பசுமைக் குடில்கள் அமைக்கத் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி ஆராய்ச்சிக் கூடங்கள் அமைப்பது, மின்சார உற்பத்தியையும் அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது ஆகிய முக்கிய திட்ட செயல்பாடுகள் மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.  மாநிலத்தின்அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையானவைகளை நிறைவேற்றும் வகையில்  12- வது ஐந்தாண்டு திட்டத்திற்கு திட்டக்கமிஷன் சரியான அணுகுமுறையுடன் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.  நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்