முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: சிதம்பரத்திடம் விசாரணையா? தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, அக். - 12 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரும் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், ப. சிதம்பரத்தின் மீது விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்று மத்திய அரசும், சி.பி.ஐ.யும் நீதிமன்றத்தில் தெரிவித்தன.  2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறைகளில் மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராசாவுடன் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நேரடி தொடர்பு எதுவும் கிடையாது. இருவருக்கும் இடையே நேரடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் ஆதாரம் இல்லை. நிதித்துறை செயலர் மூலம் மட்டுமே ஆவணங்கள் கைமாறி உள்ளன என்று மத்திய அரசும், சி.பி.ஐ.யும் தெரிவித்தன. மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவும், சி.பி.ஐ. தரப்பில் வேணுகோபாலும் ஆஜராகி வாதாடினர். 2 ஜி வழக்கில் ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் வழக்கு விசாரணையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன என்று ராவ் குற்றம் சாட்டினார். சி.பி.ஐ. தரப்பு வாதங்களை சுப்பிரமணியம் சுவாமியும், மற்றொரு மனுதாரரான சி.பி.ஐ.யும் தன்னார்வ தொண்டு அமைப்பும் மறுத்தன. சி.பி.ஐ. சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகளை சிதம்பரம் கட்டுப்படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு அமைச்சகம், நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அலைக்கற்றை விவகாரத்தின் ஒவ்வொரு அசைவும் சிதம்பரத்திற்கு தெரியும் என்று அவர் கூறினார். அவரது கூற்றை ஆமோதித்து சுப்பிரமணியம் சுவாமியும் கருத்து தெரிவித்தார். அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது ராசா என்ன செய்து கொண்டிருந்தார் என்பது சிதம்பரத்திற்கு தெரியும். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!