மதுரை புதிய மேயர் - கவுன்சிலர்கள் 25-ம் தேதி பதவி ஏற்பு

Image Unavailable

 

மதுரை,அக்.21 - புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் வரும் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். மாநகராட்சி கூட்ட அரங்கு 100 கவுன்சிலர்கள் அமரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி தேர்தல் வாக்குஎண்ணிக்கை இன்று 21-ம் தேதி நடக்கிறது. மதுரை மருத்துவக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் ஆகிய 3 மையங்களில் வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் மேயர் மற்றும் கவுன்சிலருக்கு வாக்குஎண்ணிக்கை ஒரே நேரத்தில் நடைபெறும். கவுன்சிலர் தேர்தல் முடிவு உடனுக்குடன் அறிவிக்கப்படும். மேயருக்கு 100 வார்டுகளிலும் கிடைத்த வாக்குகளின் கூட்டுதொகை கணக்கிடப்பட்டு வெளியாகும். எனவே மேயர் தேர்தல் இறுதி முடிவு மாலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் புதிய மேயர் மற்றும் 99 வார்டுகளின் கவுன்சிலர்கள் வரும் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆணையாளர் நடராஜன் செய்து வருகிறார். மாநகராட்சி, மாமன்றத்தில் இதுவரை 72 கவுன்சிலர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி இருந்தது. மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 கவுன்சிலர்கள் வருவதால், அதற்கு ஏற்ற வகையில் மாநகராட்சி மன்றம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. 

   துணை மேயர் மற்றும் 4 மண்டல தலைவர்கள் தேர்தல் வரும் 29 -ம் தேதி நடக்கிறது.  இவர்களை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். 

மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார்.  அதன் பிறகு 1978 -ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது.  2 ஆண்டுக்கு  ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் படி 1978 -ம் ஆண்டில் முத்து, 1980 -ம் ஆண்டில் கிருஷ்ணன், 1982 -ம் ஆண்டில் பட்டுராஜன் மேயராக இருந்தனர். இதன் பிறகு மேயர் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டு 1999 -ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடந்தது. மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதில் 2001 -ம் ஆண்டில் குழந்தைவேலு, 2006 -ம் ஆண்டில் மேயயரை கவுன்சிலர்கல் தேர்வு செய்தனர். இதில் தேன்மொழி மேயரானார். இந்த தேர்தலில் மீண்டும் மேயரை மக்கள் நேடியாக தேர்வு செய்யும் முறை அமலாகி உள்ளது. புதிதாக 8 -வது மேயர் பதவி ஏற்க உள்ளார். 

மதுரை மாநகராட்சி 37 ஆண்டுகளுக்கு பிறகு 52 சதுர கி.மீ. பரப்பில் இருந்து 148 ச.கி.மீ. ஆக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஆனையூர் நகராட்சிகள், திருநகர், ஆர்.வி.பட்டி, விளாங்குடி, பேரூராட்சிகள், உத்தங்குடி, மேலமடை, திருப்பாலை, கண்ணநேந்தல், நாகனாகுளம், வண்டியூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, சின்னஅனுப்பானடி, புதுக்குளம் பிட் -2, தியாகராஜர் காலனி ஆகிய 11 ஊராட்சிகளை வரும் 24-ம் தேதி மாநகராட்சி ஏற்கிறது. 

மேயருக்கான 100 பவுன் தங்க மாலை, வெள்ளி செங்கோல் மாநகராட்சி கருவூலத்தல் உள்ளது. அதனை அதிகாரிகள் சரிபார்த்து,  பாலிஸ் செய்யதுள்ளனர். மாநகராட்சி முத்திரை பதிக்கப்பட்ட தங்க பதக்கங்களை தங்க சங்கிலியில் மாலையாக கோர்க்கப்பட்டுள்ளது.  இதை புதிய வெல்வெட் துணியில் பொருத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர். பதவி ஏற்பில் தங்கமாலை அணிவித்து, மேயர்கையில் மாநகரை ஒப்படைக்கும் விதமாக வெள்ளி செங்கோல் அளிக்கப்படும். அந்த செங்கோலும் பாலிஸ் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.  மேயருக்கு அணிவிக்கப்படும் கருப்பு நிற புதிய அங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ