ஸ்பெக்ட்ரம் வழக்கு - குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தயாராகி வரும் சி.பி.ஐ.

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      ஊழல்
CBI

 

புதுடெல்லி,மார்ச்.8 - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி வரும் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி வருகிறது. இதற்கிடையில் மேலும பல முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 

தி.மு.க. முன்னாள் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசாவால் நாட்டிற்கு ரூ. ஒரு லட்சத்து 70 கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையானது சுப்ரீம்கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ராசா கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வருகின்ற 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ராசாவின் தனி செயலாளராக இருந்த சந்தோலியா, தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, டி.பி.ரியாலிட்டி கம்பெனியின் உரிமையாளர் பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.வுக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மேலும் பல முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் அரசியல் பெண் தரகர் நீராராடியா உள்பட பல முக்கிய பிரமுகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. ஏற்கனவே பல தடவை விசாரணை நடத்தியுள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: