வரதட்சணை தடுப்பு சட்டத்தை நீக்க சபாநாயகர் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      இந்தியா
Meera

 

புதுடெல்லி,மார்ச்.8 - வரதட்சணை தடுப்பு சட்டத்தை நீக்க லோக்சபை சபாநாயகர் மீரா குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை பாழாகிக்கொண்டியிருக்கிறது. வரதட்சணையை தடுக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. இதில் வரதட்சணை வாங்குபவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் விதிமுறைகள் உள்ளன. இந்த சட்டமும் அதன் உள்பிரிவுகளும் கடுமையாக இருப்பதால் அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சமூகத்தில் ஒரு பிரிவினர் கோரி வருகிறார்கள். 

இந்தநிலையில் இன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நேற்று லோக்சபை சபாநாயகர் மீரா குமார் நேற்று பெண் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வரதட்சணை தடுப்பு சட்டத்தில் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டப்பிரிவுகளை நீக்கக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு,கண்ணியம், சமத்துவம் மிகவும் அவசியமாகும். வரதட்சணை தடுப்பு சட்டத்தில் 498-ல் எ பிரிவு பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது. இதை நீக்க ஒரு பிரிவினர் கோரி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த மீரா குமார், இந்த சட்டப்பிரிவு பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் இந்த பிரிவில் ஒரு வார்த்தையைக்கூட நீக்கக்கூடாது என்றார். மனைவியை கணவன் துன்புறுத்தி கொடுமைப்படுத்தும்போது மனைவியோ அல்லது அவரது உறவினரோ வழக்கு தொடர இந்த சட்டப்பிரிவு வகை செய்வதோடு, குற்றச்சாட்டுக்குள்ளாகி இருப்பவர்கள் ஜாமீனிலும் வெளிவர முடியாது. அதனால் இந்த சட்டத்தை நீக்கக்கூடாது என்று பெண்கள் சங்கத்தினரும் பெண்களுக்கான தேசிய கமிஷனும் கோரி வருகின்றன. பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அரசியல் கட்சிகளிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை விரைவில் போக்க வேண்டும் என்றும் மீரா குமார் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: