மகளிருக்குரிய இட ஒதுக்கீடு வழங்க வைகோ வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
vaiko 3

 

சென்னை, மார்ச்.8 - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வைகோ கூறியிருப்பதாவது:- தங்களுடைய பிள்ளைகளுக்காகவும், கணவன்மார்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் பெண்கள் கொடுத்து இருக்கின்ற விலை, அவர்கள் வடித்து இருக்கின்ற கண்ணீர், சகித்துக் கொண்ட துயரங்கள் கணக்கில் அடங்காதவை. அத்தகைய பெண்கள், அடிமைத்தளையில் இருந்து சமுதாய விடுதலை பெற வேண்டும், உரிமைகளை பெற்று உயர வேண்டும் என்ற விழிப்பு உணர்வை தமிழ் மண்ணில் ஏற்படுத்தினார் தந்தை பெரியார்.  மாதர் தம்மை இழிவு செய்யும்  மடமையை கொளுத்துவோம் என்றார் பாரதி. பெண்ணடிமை தீரும் மட்டும், பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்திடுதல் முயற்கொம்பே என்றார் பாவேந்தர். 

ஆனால், அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் பெண்களின் உயிருக்கும், கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுகின்ற கொடுஞ்செயல்கள் பெருகி வருவது வேதனை அளிக்கிறது. ஈழத்தில் நம் சொந்த சகோதரிகளை இழிவுபடுத்தி, சின்னஞ்சிறு பெண் குழந்தைகளையும் கொன்று குவித்த கொடுமை நமது நெஞ்சத்தை கீறி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. 

காலம் காலமாக கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்து வருகின்ற கண்ணிய உணர்வால்தான், இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. அன்பின் வடிவங்களான பெண்கள், புரட்சியின் நாற்றங்கால்களாக பொங்கி எழுந்தால் புவியில் புதுமை செழிக்கும். மறுமலர்ச்சி குலுங்கும். மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கின்ற பெண்களின் முன்னேற்றமே ஒட்டுமொத்த உயர்வுக்கு வழிவகுக்கும். அதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும். 

உலக மகளிர் நாளில் தாய்மார்களுக்கு மகளிருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: