நாடார் சமுதாயத்திற்கு 62 தொகுதிகளில் செல்வாக்கு உயர்வு - சரத்குமார்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Sarath 0

 

சென்னை, மார்ச் 8 - நாடார் சமுதாயத்திற்கு 62 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது என்று  சரத்குமார் கூறினார். நாடார் சமுதாய  ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன், நாடார் மகாஜன சங்க செயலாளர் கரிக்கோல் ராஜ், டி.என்.தனபாலன், டி.பத்மநாபன், ஏ.சுபாஷ் பண்ணையார், மயிலை சி.பெரியசாமி, நெல்லை நெடுமாறன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்திற்கு முன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடார் சமுதாயத்தை ஒருங்கிணைத்து வருகிற தேர்தலில் எங்களது பலத்தை நிரூபிப்போம். 62      தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. எங்களை மதித்து சீட்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி சேருவோம். நாடார் சமுதாயம் உழைக்கின்ற சமுதாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சமூக சிந்தனையும், கொடை குணமும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை முழுமையாக மனதில் கொண்டு, தாம் ஈட்டுகின்ற பொருளில் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், திருமண கூடங்கள் என்று அனைத்து சமுதாய மக்களும் பயன் பெற, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் பாதையில் அயராது உழைத்து வருபவர்கள், தமிழகத்தில் தென் பகுதிகளில் இருந்தாலும் தங்கள் சமுக சிந்தனையாலும்,  ஒருமைப்பாட்டின் தத்துவத்தை உணர்ந்தவர்களாக அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வணிகம் செய்து ஒற்றுமையை வளர்த்து பிறர் எழும் முன் எழுந்து கடுமையான உழைப்பிற்கு பிறகு, ஊர் உறங்கிய பிறகு உறங்கச்    செல்லும் உழைப்பாளிகள். 

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சங்கம் அமைத்து தொண்டாற்றி வருகின்ற இந்த சமுதாயத்திற்கு தமிழகத்தில் மட்டும் 3,000 சங்கங்களுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.  இப்படி பல பெருமைகள் உடைய இந்த சமுதாயம் கர்ம வீரர் காமராஜருக்குப் பின் ஓர் குடையின் கீழ் ஒன்று சேர்ந்து அரசியல் அங்கீகாரம் பெற இயலாமல் போனது நமக்கு வேதனைதான்.           இந்நிலையிலிருந்து சமுதாயத்தை ஒன்றுபடுத்தி ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் பெருந்தலைவர் விட்டு சென்ற  சமூக,  அரசியல், மக்கள் பணியை தொடர ஒரு வலிமையான தளம் தேவைபடுகின்ற சூழ்நிலைக்கு நமது சமுதாயம் இருப்பதை உணர்ந்து, தனித்தனியே இருக்கின்ற அமைப்புகளின் சங்கங்களின், கட்சிகளின் ஒன்றுபட்ட செயலால், `இழந்ததை பெறுவோம் ஒன்று படுவோம், கூரிய வாள் கொண்டு அறுத்தாலும் பிரியோம் என்று' உலகத்திற்கு எடுத்துக்காட்டி ஓர் அணியில் நின்று நாடார் சமுதாயம் இன்று முதல் செயல்படும். 

இந்த ஒன்றுபட்ட புதிய அமைப்பிற்கு என்னை (சரத்குமார்) ஒருமனதாக தலைவராக ஏற்று வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற தேர்தலை குறுகிய காலத்திற்குள் சந்திக்க இருப்பதால் இத்தேர்தலில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அகில   இந்திய சமுத்துவ மக்கள் கட்சியின் பெயரில் தேர்தலை  சந்திப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய பொழிவுடன் கொடியிலும் மாற்றம் செய்யப்படும் என்பதும் முடிவு செய்யப்பட்டது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: