முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக பா.ஜ.க. ஆட்சியை கலைக்க காங். கோரிக்கை

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஹூப்ளி, அக்.- 24 - கர்நாடகத்தில் ஊழல் மிகுந்த பா.ஜ.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று  அம்மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நேற்று முன்தினம் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து  கர்நாடக அரசியல் நிலைமை குறித்து விவாதித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார். தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு பரமேஸ்வர் நேற்று பெங்களூர் திரும்பினார். பிறகு ஹூப்ளியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகத்தில் ஊழல் மிகுந்த பா.ஜ.க. ஆட்சியை கலைத்து விட்டு  ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் அல்லது  சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் அமைச்சர் ஒருவர் சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு பா.ஜ.க. அமைச்சர் மீதும் லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இப்படி பா.ஜ. க. ஆட்சியில் பயங்கர ஊழல்கள் நடந்துள்ளன என்றும் இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ரத யாத்திரை தொடங்கியுள்ளது குறித்து கேட்டதற்கு பா.ஜ.க. ஆட்சியில்தான் ஊழல் நடந்து வருகிறது. அப்படிப்பட்ட கட்சியை  சேர்ந்தவர் ஊழலுக்கு எதிராக ஊர்வலம் போவது கேலிக்குரிய விஷயமாக இருக்கிறது என்றார். மேலும்  கர்நாடகத்தில் அத்வானி தனது ரத யாத்திரையை மேற்கொள்ள எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!