முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி. ஊழல்: பார்லி. பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.1 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற பொது கணக்கு குழுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்  வழக்கில் தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி. ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்தி வருகிறது.  பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த பொதுக் கணக்கு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. 

இந்த குழுவின் கூட்டம் அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

அப்போது அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதமும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.

இந்த குழு விசாரணைக்கு வர வேண்டும் என்று முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) ஆர்.பி. சிங்கிற்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கைக்கு சிங் மாறுபட்ட கருத்தை கூறுவதேன் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த குழு கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் இந்த கூட்டத்தை குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒத்திவைத்தார். 

இந்த கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் சாத் பண்டிகை  கொண்டாடப்படுவதால் இன்றும் இந்த கூட்டம் நடக்காது என்று கூறப்படுகிறது.

 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது. ஆனால் ரூ. 6,000 கோடிக்குத்தான் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிங் கூறுகிறார்.

முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) சிங் மட்டுமல்ல மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலையும் இந்த குழு முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரியுள்ளது. ஏனென்றால் இந்த ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கபில்சிபல் கூறியுள்ளார் என்றும் பா.ஜ.க. எம்.பி.  பிரகாஷ் ஜவ்தேகார் கூறியுள்ளார்.

இதே போல இந்த ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து சி.பி.ஐ. இயக்குனரும் மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார். எனவே அவரையும் இந்த குழு முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம் எழுதியுள்ள கடிதம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. ,  பிஜூ ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இந்த கடிதம் தொடர்பாக விடை காணப்படாத கேள்விகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த குழு முன்பு ஆஜராக முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) சிங்கை  அழைக்க கூடாது என்று கூறி இக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதனால் இந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே இந்த குழு கூட்டத்தை ஜோஷி ஒத்திவைத்தார்.இந்த குழு கூட்டம் கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜோஷி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்