முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் - இன்று தேரோட்டம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், நவ.1 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நேற்று சூரசம்ஹார லீலை நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த 26 ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கையில் காப்பு கட்டி கோயில் மண்டபங்களில் தங்கி விரத மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மட்டும் சம்ஹார அலங்காரத்தில் வேலுடன் தங்க மயில் வாகனத்திலும், வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகு தேவரும், கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பூஜைகள், தீபாராதனைகள் முடித்து ரத வீதிகளில் புறப்பாடாகினர். முருகப் பெருமான் பிரதிநிதியாக திருவிழா நம்பியார் சிவாச்சார்யார் வாள் ஏந்தி செல்ல, தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வேல் கொண்டு சூரபத்மனை விரட்டி சென்ற நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு உருவங்களில் மாறி மாறி சென்ற சூரபத்மனை எட்டுத்திக்குகளிலும் விரட்டி சென்ற முருகப் பெருமான் இறுதியில் வதம் செய்தார். 

அதனை தொடர்ந்து சன்னதி தெருவில் எழுந்தருளி உள்ள அருள்மிகு சொக்கநாதர் கோயில் முன்பு முருகப் பெருமான் முன்னிலையில் வெள்ளை குதிரை வாகனத்தில் செல்லப்பா சிவாச்சார்யார் கையில் வாள் ஏந்தி சூரசம்ஹார புராண கதையை எடுத்துரைத்தார். பின்னர் தீபாராதனைகள் முடித்து உற்சவர் சன்னதியில் முருகப் பெருமான், தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து பூப்பல்லக்கில் முருகப் பெருமான், தெய்வானை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. காப்புக் கட்டி விரதமேற்கொண்ட பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துக் கொண்டனர். விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கிரிவீதி மற்றும் ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். மாலையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்பு 105 படி அரிசியினால் தயாரிக்கப்படும் தயிர் சாதம் படைக்கப்பட்டு நைவேதன தரிசனம் நடக்கும். 

 

1. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு முருகப் பெருமான் அணிந்திருந்த உடை, நகைகள், மாலைகள் அனைத்தும் சிகப்பு நிறத்தில் இருந்தன. சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் கோபமுடன் இருப்பதால் அனைத்தும் சிவப்பு நிறத்தில் இருந்தது.

2. திருவிழாக் காலங்களில் தெய்வானையுடன் வலம் வரும் சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரத்தின் போது மட்டும் தனியாக புறப்பாடாகினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்