முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை மம்தாபேனர்ஜி கட்சி திடீர்பல்டி

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, நவ.- 9 - பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் மம்தா பேனர்ஜி பல்டி அடித்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் இதுபோன்ற விலை உயர்வை அறிவித்தால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுமாம் அந்த கட்சி. பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு வாரத்திற்கு ஒருமுறை உயர்த்தத் தொடங்கிவிட்டது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எண்ணை நிறுவனங்களுக்கே இந்த அரசு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது. மேலும் விலை நிர்ணய உரிமையையும் அந்த நிறுவனங்களுக்கே தாரைவார்த்துவிட்டது மத்திய அரசு. இதனால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. மக்கள் வாகனங்களை வைத்துக்கொள்ளவே பயப்படுகிறார்கள்.  சமீபத்தில் கூட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி, மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதாக மிரட்டினார். இதை அனைவரும் உண்மை என்றே நம்பினர். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முடிவைத் தெரிவிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது  கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது பிரதமரிடம் அவர்கள் இதுபற்றி விவாதித்தனர். தங்கள் கவலையையும் வெளிப்படுத்தினர். ஆனாலும் விலை உயர்வை திரும்பப் பெறுவது பற்றி அவர்களுக்கு பிரதமர் எந்த உறுதியும் அளிக்கவில்லையாம். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்போம் என்று கூறிவிட்டு அவர்கள் நழுவிக்கொண்டனர். இன்னொரு முறை இப்படி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மிரட்டியதோடு திரிணாமுல் காங்கிரஸ் தனது பணியை முடித்துக்கொண்டது. அதாவது சமீபத்திய விலை உயர்வை அந்த கட்சி ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்த பிறகு  மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சுதிப் பந்தோபாத்தியாயா நிருபர்களிடம் கூறுகையில், பிரதமரிடம் எங்கள் உணர்வுகளை தெரிவித்தோம். கொல்கத்தாவில் நடந்த எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம்  கொடுத்தோம் என்று கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், மீண்டும் இப்படியெல்லாம் முடிவெடுத்தால் அதாவது விலையை உயர்த்தினால் அதை சுலபமாக எடுத்துக்கொள்ள  மாட்டோம் என்று பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார். விலைக் குறைப்பு பற்றி பிரதமர் ஏதேனும் உறுதியளித்தாரா? என்று கேட்டபோது, அதற்கு பாதகமாக பதிலளித்தார் பந்தோபாத்தியாயா. முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டால் நாங்கள் அரசில் இருக்க மாட்டோம், விலகிவிடுவோம் என்று அவர் கூறினாராம். ஆக இப்போதைக்கு அவர் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதனால் மத்திய அரசு கவிழ்வதில் இருந்து தப்பிவிட்டது. மம்தா பேனர்ஜி என்றாலே பல்டிதானோ...? 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!