முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் புதிய கால்வாய்கள் அதிகாரிகளுடன் முத்துராமலிங்கம் ஆய்வு

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், நவ.- 10 - திருமங்கலத்தில் வெள்ள பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் புதிய கால்வாய் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார். கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமங்கலம் நகரைச் சுற்றியுள்ள கண்மாய்கள் பெருகியதை தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அப்போதைய தி.மு.க. அரசு இதனை கண்டுக்கொள்ளாததால் கக்கன் காலனி, மம்சாபுரம், அண்ணாநகர், ரோஜா தோட்டம், குறிஞ்சிநகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் சொல்லொண்னா துன்பங்களுக்கு ஆளாகினர். இந்நிலையில் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் களமிறங்கிய அப்போதைய காங்கிரஸ் நகராட்சி மற்றும் தி.மு.க. நிர்வாகம் நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்துத் தள்ளி பொதுமக்களை நடுத்தெருவில் நிறுத்தியது. ஆனால் வெள்ளம் வெளியேறிய வழிவகை செய்திடாமல் புதிய கால்வாய் கட்டாமல் பல லட்சம் செலவு செய்து கால்வாய் தூர்வாரிச்சென்றுவிட்டனர். தற்போது அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில் கக்கன் காலனி ஓடை துவங்கி குண்டாறு இணைப்பு வரையில் புதிதாக வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத்திடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருமங்கலத்தில் புதிய வெள்ள தடுப்பு கால்வாய்கள் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சென்று அண்ணாநகர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மம்சாபுரம் போன்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடையே முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசுகையில், தமிழக முதல்வரின் அனுமதியுடன் திருமங்கலம் நகரில் வெள்ளச் சேதங்களை தவிர்த்திட புதிய கால்வாய் அமைத்திட பொதுப்பணித்துறையினர் 3 திட்டங்களை கைவசம் வைத்துள்ளனர். இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் புதிய கால்வாய் பணிகள் விரைவாக தொடங்கப்பட்டு பணிகள் வெகு சீக்கிரம் முடிக்கப்படும் என்று கூறினார். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுகுமாறன், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன், நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன், நகர்மன்ற துணைத்தலைவர் சதீஷ் சண்முகம், நகரதுணைச் செயலாளர் ராஜாமணி, அவைத்தலைவர் ஜஹாங்கீர், மாவட்ட பிரதிநிதி கலைச்செல்வன், அண்ணா தொழிற்சங்க  இன்பம், நகராட்சி மேற்பார்வையாளர் அமுதா மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்