முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

நாமக்கல் நவ.14​குமாரபாளையத்தில் உள்ள கல்வி அறக்கட்டளையில் ரூ.20 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜே.கே.கே.நடராஜா தொழில் அதிபர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உறவினர் மகள் செந்தாமரை என்பவரை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து வளர்த்தனர். தொழில் அதிபர் நடராஜா 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை தனக்கு பிறகு தனது மனைவி தனலட்சுமி நிர்வகிக்க வேண்டும் என்று நடராஜா பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 1995 ஆம் ஆண்டு நடராஜா இறந்துவிட்டார். அதன்பிறகு அறக்கட்டளையின் வாரிசு நான் தான் என்று செந்தாமரை அறிவித்தார். இதனால் நடராஜாவின் மனைவி தனலட்சுமிக்கும், வளர்ப்பு மகள் செந்தாமரைக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் உதவியோடு செந்தாமரை இந்த அறக்கட்டளையை தன்வசமாக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது.நானும் எனது கணவரும் கூட்டாக சேர்ந்து 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் தொடங்கினோம். அதன் மூலம் பல பள்ளி,கல்லூரிகளை நடத்தி வந்தோம்.கடந்த 1995 ல் எங்கள் வளர்ப்பு மகள் செந்தாமரையும், அவரது கணவர் கிருஷ்ணராஜூவும் போலி ஆவணம் மூலம் எங்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். அதற்கு தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது பினாமி பழனி முருகன்,குமாரபாளையம் மாணிக்கம்,ஈரோடு வக்கீல் பழனிசாமி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு என் கணவர் மற்றும் என் கையெழுதையும் போலியாக போட்டுள்ளனர். என் கணவரையும் கொலை செய்து என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் புகார் அளித்தேன். அவர்கள் விசாரணை செய்து தடயவியல் நிபுணர் அறிக்கை பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,அவரது பினாமி பழனி முருகன்,ஈரோடு வக்கீல் பழனிசாமி,குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து செந்தாமரை, அவரது கணவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் டிரஸ்ட் சொத்து, அரசு உதவி பெறும் கல்லூரி, பள்ளி நிலம், கட்டிடம் உள்பட அசையும் சொத்துக்கள், அனைத்தையும் கல்வித்துறை அனுமதியின்றி ஈரோடு இந்தியன் வங்கியில் அடமான வைத்து ரூ.20 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர்.

அதன் மூலம் சாத்தூர் ராமச்சந்திரன் பினாமி பழனிமுருகன் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.செந்தாமரை உள்ளிட்டோர் எங்களை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றாவிட்டனர். எனவே சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஜே.கே.ஜே.நடராஜாவின் வளர்ப்பு மகளும்,ஜே.கே.ஜே.நடராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மேனுமான செந்தாமரை,அவரது கணவர் கிருஷ்ணராஜ்,பழனிமுருகன், வக்கீல் பழனிசாமி,தி.மு.க.பிரமுகர் மாணிக்கம் உள்ளிட்ட 6 பேர் மீது சதி செய்தல்,நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல்,மோசடி செய்தல்,ஆள்கடத்தல், போலி ஆவணம் தயார் செய்தல், போலி ஆவணம் தாக்கல் செய்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony