முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் கைது

புதன்கிழமை, 9 மார்ச் 2011      இந்தியா
Akilesh

 

லக்னோ, மார்ச் - 10 - உத்தரபிரதேசத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேசத்தில் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியினர் கடந்த 7,8,9 ஆகிய தேதிகளில் 3 நாள் கண்டன போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த 6 ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் மாநில சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர்கள் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

 நேற்று லக்னோவில் சமாஜ்வாடி கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்துசேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் போராட்ட களத்திற்கு செல்லும்போது அவரை போலீசார் வழிமறித்து வலுக்கட்டாயமாக கைது செய்து  காரில் ஏற்றி சென்றனர். அப்போது போலீசாருக்கும் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது சமாஜ்வாடி கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். செய்தியாளர்களிடம் பேசுவதற்குகூட வாய்ப்பு கொடுக்காமல் அகிலேஷ் யாதவை போலீசார் உடனடியாக காரில் ஏற்றி சிறைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் தடை உத்தரவு அமுலில் இருப்பதால் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவிய உடனே ஹஸ்ரத்கன்ஜ் கிராஸ் ரோட்டில் ஏராளமான சமாஜ்வாடி தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது போலீசார் பயங்கர தடி அடியை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: