முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த பிரதமருக்கு கடிதம்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ.17 - தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள், துன்புறுத்தல்கள் போன்றவை குறித்து நான் ஏற்கனவே தங்களது கவனத்திற்கு  7.6.2011, 21.6.2011, 10.10.2011, 7.11.2011 ஆகிய தேதிகளில் கொண்டுவந்திருக்கிறேன். இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஒரு தேசிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த கடிதங்களில் நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். இதுபோன்ற தாக்குதல்கள் இந்தியா மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதி அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். 

ஆனால் மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தமிழக மீனவர்களின் ஆழ்ந்த கவலையை தங்களுக்கு இந்த கடிதத்தின் வாயிலாக மீண்டும் தெரியப்படுத்துகிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஓயவில்லை. நாளுக்குநாள் அது அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

கடந்த 15 ம் தேதி தமிழக மீனவர்கள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. விரைவு ரோந்துப் படகு ஒன்றில் வந்த 15 இலங்கை கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் செல்வராஜ் என்ற தமிழக மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட துடித்துக்கொண்டிருந்த இந்த மீனவர், சக மீனவர்களால் கரைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதுபோன்று தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களால் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்காதது தமிழக மீனவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திசைமாறி வரும் மீனவர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை கடற்படையினர் நடந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு கூறிவருகிறது. ஆனால் அதேவேளையில் தனது கடற்படையினரால் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு மவுனமாக இருந்துவருகிறது. இப்படி இலங்கை அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. 

அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்திவரும் இலங்கை கடற்படையின் மூர்க்கத்தனமான செயல்களை கட்டுப்படுத்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாக் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பல தலைமுறைகளாக மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இலங்கை கடற்படையின் இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்த இதுகுறித்து தாங்கள் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்