தயாளு அம்மாள்-கனிமொழியிடம் சி.பி.ஐ.விசாரணை

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      ஊழல்
kani-thayalau

 

சென்னை,மார்ச்.12 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரிடம் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை கிட்டத்தட்ட மூன்றேகால் மணி நேரம் நடந்தது. இந்த விசாரணையால் தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் முகத்தில் சோகம் நிழலாடியது. விசாரணை நடந்த அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நேர்காணலும் காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டு விவகாரம் தொடர்பான பேச்சும் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்படுவதுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலாகும். இந்த ஊழல் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுவதற்கு காரணம் இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பெரும் தொகைதான். இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கை துறை அதிகாரி வினோத் ராய் தனது அறிக்கையில் கூறிய பிறகுதான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி சபையையே முடக்க வைத்தனர். இதன் எதிரொலியாக இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய தொலைதொடர்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலகினார். அவர் பதவி விலகினால் போதாது. அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தின. அந்த நேரத்தில் சுப்ரீம்கோர்ட்டும் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் பிரதமருக்கும் சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. சுப்ரீம்கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த ஊழலை விசாரித்து வருகிறது. பதவி விலகிய ராசாவின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் சி.பி.ஐ.விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் சுவான் டெலிகாம் அதிகாரி பால்வா கைது செய்யப்பட்டார். ராசா கைது செய்யப்பட்டபோது அவருடன் சேர்த்து 2 முன்னாள் மத்திய செயலாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது ரூ. 214 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறிய விவகாரமும் அம்பலமானது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட டி.பி.ரியால்டி நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்கு பணம் போய் சேர்ந்த விவகாரம் அம்பலமானது. கலைஞர் தொலைக்காட்சியில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் பங்கு தாரர்களாக உள்ளனர். மற்றொரு பங்குதாரர் சரத்குமார் ரெட்டி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் எந்த நேரமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாகவோ என்னவோ காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் கருணாநிதி முன்வந்தார். மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகப்போவதாகவும் தி.மு.க. உயர்நிலைக்குழுவை கூட்டி மிரட்டிப்பார்த்தார் கருணாநிதி. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதற்கு பணிந்ததாக தெரியவில்லை. கடைசியில் தி.மு.க.தான் பணிய நேர்ந்தது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை கொடுக்க முடியாது என்று முதலில் மறுத்த தி.மு.க. 3 நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கேட்ட அதே தொகுதிகளை கொடுக்க முன்வந்தது. ஆனால் திரைமறைவில் பல சம்பவங்கள் அரங்கேறின. ஒரு வழியாக மீண்டும் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனிமொழியிடம் எந்த நேரமும் விசாரணை நடக்கலாம் என்று தினபூமி உள்பட  பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

அதன்படி நேற்று கனிமொழியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். முன்னதாக நேற்றுக்காலை 10.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் சென்னை வந்தனர். அவர்கள் கலைஞர் டி.வி. அலுவலகம் அமைந்திருக்கும் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர். முன்கூட்டியே இதுபற்றி தகவல் தெரிந்ததால் கருணாநிதி மகள் கனிமொழியும் காலை 10.35 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து தயாளு அம்மாளும் வந்தார். இருவரும் உள்ளே சென்றனர். இவர்கள் இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் ரூ. 214 கோடி எப்படி வந்தது என்பது குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்து எடுத்துவிட்டார்களாம். இந்த விசாரணை மதியம் 1.45 வரை அதாவது கிட்டத்தட்ட மூன்றேகால் மணி நேரம் இடைவிடாமல் நடந்தது. விசாரணை முடிந்த பிறகு கனிமொழி பிற்பகல் 1.50-க்கு வெளியே வந்தார். ஆனால் நிருபர்களை சந்திக்காமல் அங்கிருந்து பறந்தார் கனிமொழி. அவரை தொடர்ந்து தயாளு அம்மாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தயாளு அம்மாள் இதுவரை கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்ததே இல்லை. ஏன் அறிவாலயத்திற்கு கூட வந்ததில்லை என கூறப்படுகிறது. நேற்று முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்காக அவர் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிடுக்கிப்பிடி விசாரணை குறித்து அறிந்த தி.மு.க. தலைவர்களும் தொண்டர்களும் அதிரச்சி அடைந்தனர். அவர்கள் முகத்தில் சோகம் நிழலாடியது. ஒருவர் முகத்திலும் உற்சாகம் இல்லை. 

    

ஒரே நேரத்தில் 3 நிகழ்வுகள்

 

அண்ணா அறிவாலயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திய அதே நேரத்தில் தி.மு.க.சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் அக்கட்சி மேலிடம் நேர் காணலும் நடத்தியது. வழக்கமாக காலை 9 மணிக்கு நேர் காணல் நடத்த கருணாநிதி வருவார். ஆனால் நேற்று அவர் சுமார் 10-45 மணிக்குத்தான் வந்தார். அவருடன் ஸ்டாலினும் உடன் வந்தார். இவ்வாறாக தி.மு.க. நேர்காணல் நடந்த அதேநேரத்தில் அதே அறிவாலயத்தில் காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டு பேச்சும் நடந்தது. காலை 11.10-க்கு இருதரப்பினரும் பேச்சை தொடங்கினர். இந்த பேச்சு 12.05 மணிக்கு முடிந்தது. ஆனாலும் சுபமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் 3 நிகழ்வுகள் நடந்தன. அதற்கு முன்பு நேற்றுக்காலை 8 மணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கோபாலபுரத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பா.ம.க. போட்டியிடும் சில தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதாம். ஆனால் அதை விட்டுத்தர முடியாது என்று கருணாநிதியிடம் ராமதாஸ் கண்டிப்பாக கூறிவிட்டாராம். மொத்தத்தில் நேற்று தி.மு.க.வுக்கு நேரம் சரியில்லையோ என்று சொல்ல தோன்றுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: