முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.2 - இந்திய பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும் பண வீக்கமும், மிக அதிகமான வட்டி விகிதங்களும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை பெருமளவில் சரிய செய்துள்ளன. செப்டம்பர் வரையிலான கடந்த 3 மாத காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 8.4 சதவீதமாக இருந்தது. குறிப்பாக, இரும்பு, சிமிண்ட், நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய உற்பத்தி துறைகளின் வளர்ச்சி மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 7.2 சதவீதமாக இருந்த இந்த துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாக குறைந்து விட்டது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 16 சதவீதத்தை இந்த துறைதான் பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு சந்தையில் உள்ள நிதியை குறைக்க வங்கிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. ஆனால் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகரித்து விட்டதால், வீடுகள் கட்டுவதும், வாகனங்கள் வாங்குவதும் குறைந்து விட்டது. கட்டுமான பணிகள் குறைந்து விட்டதால் இரும்பு, சிமிண்ட் உற்பத்தியும் குறைக்கப்பட்டு விட்டது. அதே போல் வாகனங்களின் விற்பனை குறைந்து விட்டதால் இரும்பு உற்பத்தியும் குறைக்கப்பட்டு விட்டது. 

கடந்த 2010 - 11 ம் ஆண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை காட்டிய இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 3 மாதங்களில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய பொருளாதாரத்தையும் தாக்கும் என்பதால் அடுத்த சில ஆண்டுகள் இந்தியாவுக்கு பெரும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக, 2012 ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக தாக்குப் பிடிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இது 6.9 சதவீதமாக சரியும் என்று மோர்கன் ஸ்டான்லி சர்வதேச நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்