முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியாற்றின் குறுக்கே நடைப்பாலம்: முதல்வர் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.4 - காத்தான்காடு அருகே அரியாற்றின் குறுக்கே 70 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில்  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நான், இத்தொகுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, இத்தொகுதி மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தேன். 

சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று நான் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றபின், என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த ஸ்ரீரங்கம் தொகுதி வாழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம், 19.6.2011 அன்று ஸ்ரீரங்கத்தில் அரசு விழாவிற்கு ஏற்பாடு செய்து,  190 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டினேன்.

இதில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு வருகைத் தரும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி, மின்கல சீருந்து, புதிய மகளிர் தோட்டக்கலை கல்லூரி, புதிய துணை மின் நிலையங்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துதல், காவிரி கூட்டுக் குடிநீnullர் திட்டத்திற்கு புத்துயிர் அளித்தல், முத்தரசநல்லூர் அருகே தடுப்பணை, பல்வேறு சாலைகள் அமைத்தல்,  பாலங்கள் கட்டுதல், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர்​அல்லித்துறை சாலையில் அரியாற்றின் குறுக்கே 1 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில்  பாலம் அமைத்தல் ஆகியவை அடங்கும். 

இந்தச் சூழ்நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள காத்தான்காடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்,  மழை மற்றும் அரியாற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஆற்றை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்ற செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  

இந்தச் செய்தியை கேள்விப்பட்டவுடன், இது குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல், தற்போது புங்கனூர்​அல்லித்துறை சாலையில் அமைக்கப்படவுள்ள பாலம் மற்றும் காத்தான்காடு கிராமத்திற்கு மேற்கில் 650 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டு வரும் 100 மீட்டர் அகலப் பாலம் ஆகியவை காத்தான்காடு கிராமத்திலிருந்து அதிக தொலைவில் உள்ளதை கருத்தில் கொண்டு, காத்தான்காடு கிராம பொதுமக்களின் நலன் கருதி, 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காத்தான்காடு அருகே, அரியாற்றின் குறுக்கே நடைப்பாலம் ஒன்று அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இந்த நடைப்பாலம் அமைக்கப்படுவதன் மூலம்,  காத்தான்காடு கிராம பொது மக்கள் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் எந்தவித சிரமுமின்றி ஆற்றைக் கடக்க இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்