முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரங்கள் எடுத்துக் கொள்ளப்படுமா?

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.4 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்கக்கோரும் வழக்கில் டாக்டர் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுமா என்பது குறித்து தீர்ப்பு வரும் 8-ம் தேதிக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஒத்திவைத்தது. ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்கக்கோரி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களையும் சாட்சிகளையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு சார்பாக டாக்டர் சுப்பிரமணியசுவாமியே ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் இரண்டாவது தலைமுறைக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் சேர்ந்துதான் முடிவு செய்துள்ளனர். அதனால் ப.சிதம்பரத்தை இந்த ஊழல் வழக்கில் சேர்த்து அவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கோர்ட்டு எடுக்க வேண்டும் என்றார். கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. என்னிடம் கொடுத்துள்ள தஸ்தாவேஜுகளில் கடந்த 2001-ம் ஆண்டு அளவுக்கே விலை நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக ப.சிதம்பரமும் அ.ராசாவும் 3 முறை சந்தித்து பேசியுள்ளனர். இதுவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்கிறது. 2ஜி அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் ப.சிதம்பரமும் அ.ராசாவும் சேர்ந்தே  விதிமுறைகளை உருவாக்கினர் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறியுள்ளார். துபாய் நாட்டு கம்பெனியான எடிசலாட், நார்வே நாட்டு கம்பெனியான டெலிநார் ஆகியவைகளுக்கு லைசென்ஸை விற்பனை செய்ய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார் என்று தஸ்தாவேஜில் ஆ.ராசா குறிப்பு எழுதியுள்ளார். இந்த இரண்டு கம்பெனிகளும் மத்திய உள்துறை அமைச்சக கண்காணிப்பில் உள்ளன. அப்படி இருந்தும் லைசென்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் ஆகிய இரண்டு கம்பெனிகளும் தங்களுடைய பங்குகளை எடிசலாட் மற்றும் டெலிநார் ஆகிய கம்பெனிகளுக்கு விற்பனை செய்துள்ளன. இந்த இரண்டு கம்பெனிகளும் இந்தியாவில்  தொழில் தொடங்க அனுமதிக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்துள்ள போதிலும் அவைகளுக்கு பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று சுப்பிரமணிய சுவாமி மேலும் கூறினார். அவரது வாதத்தை கேட்ட சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி சையினி, இந்த வழக்கில் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்யப்படுமா என்பது குறித்த தீர்ப்பை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணிய சுவாமி மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புள்ளவர்களுக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்க வேண்டும் கோரியுள்ளார். உள்நோக்கத்துடன் சிலர் இந்த வழக்கில் சேர்க்கப்படாமல் உள்ளனர் என்றும் அந்த மனுவில் சுவாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்