முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21ம் தேதி கேரள எல்லைகளில் மறியல்: வைகோ

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்,டிச.16 - நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாநில தணிக்கு குழு உறுப்பினர் கோட்டார் கோபால் இல்ல திருமணவிழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற குமரி மாவட்ட மதிமுகவினருக்கு பாராட்டுவிழா ஆகியவை நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு பல தலைவர்கள் போராடி இணைத்தனர். இது போன்று பல பகுதிகளை இணைத்த போது தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளா வசம் சென்றது. முல்லை பெரியாறு அணையால் எந்த பாதிப்பும் இல்லை. பூகம்பம் வந்தாலும் இடியாது. கேரள சகோதரர்களே, நாங்கள் உங்களை பகைவர்களாக நினைக்கவில்லை. உங்களுக்கு துன்பம் விளைவித்து நாங்கள் இன்பம் காண விரும்பவில்லை. கேரள மக்கள் 35 லட்சம் பேரை சாகடித்து விட்டு நாங்கள் சாகுபடி செய்ய விரும்பவில்லை. தமிழகத்தின் நிதி பங்களிப்பில் கட்டப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கேரள அரசு மீறிவிட்டது. நெய்யாறு இடதுகரை சானலில் கேரள அரசு தண்ணீர் தரவில்லை. அரபிக்கடலில் வீணாகும் தண்ணீர் குமரி மாவட்டத்திற்குள் வரட்டும் என்ற எண்ணம் கேரள அரசுக்கு இருக்கறதா? நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி அணை பிரச்சனையில் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் இழந்துவிட்டது. தற்போது 5 மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனையால் கேள்விக்குறியாக உள்ளது. கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. ஆனால் அவர்கள் நினைத்த அளவிற்கு அணைக்கு நீர்வரத்து இல்லை. இந்த அணை விவசாயத்துக்கு கட்டப்பட்டது அல்ல. மின்சாரத்திற்காக கட்டப்பட்ட அணை. அந்த அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் முல்லை பெரியாறு அணையை இடித்து தில் உள்ள 30டிஎம்சி தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்லலாம் என அவர்கள் திட்டம் போட்டு அணையை இடிக்க ரூ.40 கோடி ஒதுக்கி உள்ளனர். அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழக அரசு அணையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு கேட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொல்ல நீங்கள் ஆயுதங்கள் கொடுத்தீர்கள். அந்த காயம் ஆறுவதற்குள்ளே முல்லை பெரியாறு அணை உடைவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைவதற்கான தொடக்க நாளாக இருக்கும் என கூறினேன். இவ்வாறு நான் கூறியதற்காக என் மீது ராஜதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. 

இந்திய ஒருமைப்பாட்டை காக்க உச்சநீதிமன்றம் முனையும் என்று நம்புகிறேன். ஒருவேளை உச்சநீதிமன்றமும் கைவிட்டுவிட்டால் அணையை காப்பாற்ற நாம் தான் போராட வேண்டியுள்ளது. வருகிற 21ம் தேதி முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 14 வழிகளிலும் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், மாநிலதுணை பொதுசெயலாளர் நாசரேத்துரை, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony