முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓபன் செஸ்: சீன வீரருக்கு சாம்பியன் பட்டம்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.13 - சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.ஏ.டி.- ஆர்.எம்.கே. சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டியில் சீன வீரர் யூ ரூயான் சாம்பியன் பட்டம் வென்றார். தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், இந்திய செஸ் சம்மேளனத்தின் அனுமதியோடும், எஸ்.டி.ஏ.டி. மற்றும் ஆர்.எம்.கே.கல்விக் குழுமங்களின் ஆதரவோடும் 4வது சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டியை சென்னையில் நடத்தியது.

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2ம் தேதியன்று துவங்கிய இந்த போட்டியில் 13 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 50 சர்வதேச வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 385 பேர் கலந்துகொண்டனர்.

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சீன வீரர் யூ ரூயான் மொத்தம் 9 புள்ளிகளைக் கைப்பற்றி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இவருக்கு சாம்பியன் பட்டத்தோடு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

அலெக்சான்ட்ரோவ் அலெக்சி(பெலாரஸ்), அக்ஷய்ராஜ் கோரே(இந்தியா), கோமஸ் ஜான் பால்(பிலிப்பைன்ஸ்), கிரட்சிவ் மார்டின்(உக்ரைன்), ஜூமேவ் மாரட்(உஸ்பெக்கிஸ்தான்) ஆகிய 5 பேர் தலா 8.5 புள்ளிகளைக் கைப்பற்றி 2வது இடத்தைப்பகிர்ந்துகொண்டனர். 

தமிழக வீரர்கள் எஸ்.பி.சேதுராமன், பி.கார்த்திகேயன், தீபன் சக்கரவர்த்தி, நவீன்கண்ணா, எஸ்.நிதின், ஆர்.ஆர்.லக்ஷ்மண் ஆகியோர் தலா 8 புள்ளிகளை கைப்பற்றி 3வது இடத்தை பகிர்ந்துகொண்டாலும், புள்ளிகள் அடிப்படையில் ரொக்கப்பரிசுகள் பெற்றனர்.

போட்டிகளின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆர்.எம்.கே.கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் எம்.விஜயகுமார் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு அகில இந்திய செஸ் சம்மேளன தலைவரும், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகரன் முன்னிலை வகித்தார். 

சர்வதேச செஸ் சம்மேளன(பிடே) துணை தலைவர் டி.வி.சுந்தர், போட்டிக்குழு தலைவர் எஸ்.கணேசன், தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் முரளிமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்