முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெர்த், ஜன.13 - இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி இன்று பெர்த்தில் துவங்குகிறது. வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 6 டெஸ்ட்களில் தோற்றுள்ள இந்திய அணி, இந்த போட்டியிலாவது வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் மெல்போர்ன், சிட்னியில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி இன்று பெர்த் நகரில் துவங்க இருக்கிறது. 

3-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என்று மைதான தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய வீரர்களை தங்களது துல்லியமான பந்துவீச்சால் மிரட்டிவரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த டெஸ்டிலும் கடும் சாவாலாக இருப்பார்கள். அதிகமாக பவுன்சாகி வரும் பந்துகள் இந்திய வீரர்களுக்கு கடும் சோதனையைத் தரும் என்பதில் ஐயமில்லை. 

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்தில் தோற்றதைப்போல ஒட்டுமொத்த தோல்வியை சந்திக்காமல் இருக்க இந்த டெஸ்ட்டில் கடுமையாக போராடுவோம் என்று இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வீரர்களுக்குள் பிளவு உள்ளது என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதையும் ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இங்கிலாந்தில் பேட்டிங்கில் தான் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக்கொண்டு விளையாட பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர் சிறப்பாகவே விளையாடி வருகிறார் என்றும் டிராவிட் மேலும் தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய தரப்பில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு டெஸ்ட்களில் அபாரமாக பந்துவீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்த பட்டின்சன் இந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் ஹாரிஸ் களமிறங்குகிறார். மிட்சல் ஸ்டார்க்கும் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தரப்பில் அஸ்வினுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார் களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மொத்தத்தில் இந்திய வீரர்கள் அனைத்து தரப்பிலும் எழுச்சி பெற்று விளையாடினால்தான் இந்த டெஸ்ட்டை குறைந்தபட்சம் டிரா செய்யவாவது முடியும். இல்லை என்றால் மீண்டும் ஒரு இங்கிலாந்து தொடரை போல ஆஸ்திரேலிய தொடரும் முடியலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்