முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத்சிங் மகனுக்கு பதவியா? தலைவர்கள் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, ஜன.24 - பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத்சிங்கின் மகனுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் முக்கிய பதவி கொடுத்ததை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த 3 பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 8 ம் தேதி முதல் மார்ச் 3 ம் தேதிவரை 7 கட்டங்களாக 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளராக மூத்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் மகன் பங்கஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு உ.பி. பா.ஜ.க.வில் சில முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

உத்தரபிரதேச பா.ஜ.க. மாநில செயலாளர் தயாஷங்கர் சிங் மற்றும் துணை செயலாளர்கள் சந்தோஷ் சிங், அஷ்வின் தியாகி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். 

இது குறித்து தயாசங்கர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜ்நாத்சிங்கின் மகனுக்கு கட்சியில் உயர் பதவியை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் மூன்று பேரும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டோம் என்றார். ராஜ்நாத்சிங்கின் மகன் பங்கஜைக் காட்டிலும் நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் மூத்த நிலையில் இருக்கிறோம்.  ஆனால் பொதுச் செயலாளர் பதவியை எங்களுக்கு கொடுக்காமல் பங்கஜிற்கு கொடுத்திருப்பது நியாயமற்றது. எனவேதான் நாங்கள் மூவரும் இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறோம். பங்கஜிற்கு பதவி உயர்வு கொடுத்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தயா சங்கர் சிங் கூறினார். தங்களது ஆதங்கத்தை உ.பி. மாநில பா.ஜ.க. தலைவர் சூரியபிரதாப் சிங்கிற்கும் தேசிய பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரிக்கும் கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாகவும், சங்கர் சிங் தெரிவித்தார். தாங்கள் மூவரும் கட்சிக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் என்பதை அந்த கடிதத்தில் தாங்கள் விளக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் கட்சிக்காக என்ன பாடுபட்டு இருக்கிறார்? அவருக்கு எப்படி இந்த பதவியை கொடுக்கலாம் என்றும் தாங்கள் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தயாசங்கர் சிங் கூறியுள்ளார்.

அண்மையில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று  அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்