முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வினோத் கோயங்கா மனு: சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன.25 - நாட்டையே உலுக்கிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்கா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கோயங்கா தாக்கல் செய்த கோரிக்கை மனு மீது நேற்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேட்டு மத்திய புலனாய்வு துறைக்கு டெல்லி ஐகோர்ட் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. முன்னதாக, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்கா ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்டு விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி எம்.எல். மேத்தா, சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி மார்ச் 13 ம் தேதி சி.பி.ஐ. விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2011 ம் ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதியன்று வினோத் கோயங்கா கைது செய்யப்பட்டார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் 23 ம் தேதியன்று அவரை சுப்ரீம் கோர்ட் ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த வழக்கில் இதுவரை 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் 22 ம் தேதி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் இதுவரை 10 பேர் டெல்லி ஐகோர்ட்டை அணுகி உள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:

வினோத் கோயங்கா, முன்னாள் டெலிகாம் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ரிலையன்ஸ் அதிகாரிகள், குரூப் மேனேஜிங் டைரக்டர் கவுதம் ஜோஷி, மூத்த துணை தலைவர் ஹரிநாயர், குரூப் தலைவர் சுரேந்திர பிப்பாரா மற்றும் சஞ்சய் சந்திரா, ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோர் கோர்ட் உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டை அணுகி உள்ளனர். இந்த விஷயத்தில் கீழ்க்கோர்ட் உத்தரவை எதிர்த்து டெலிகாம் நிறுவனங்கள், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், யுனிடெக் நிறுவனம் ஆகியவையும் கோர்ட் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளன. 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.80 லட்சம் கோடியாகும். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பல பிரமுகர்கள் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர். அவர்களில் ஒருவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆவார். கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 210 கோடி கைமாறிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இவர், 7 மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். தற்போது இவர் அவ்வப்போது நீதிமன்ற விசாரணையில் ஆஜராகி வருகிறார். ஆனால் முதலில் கைது செய்யப்பட்ட ஆ. ராசா, இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்