முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் கூடுகிறது: நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 7 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகின்றன. 9ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என 45 பேர் பதவியேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.

இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதாவது பாராளுமன்றம் இன்று கூடுகிறது. நாளை 8ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்கிறார். ஆனால் அதற்கு முன்பே பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே.

நாளை மறுநாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பிறகு 10ம் தேதி இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தி உள்ளார். இந்த பட்ஜெட் மூலம் மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு சலுகை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடுமையான வரி விதிப்புகளும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத் தொடரில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புவார்கள் என்று தெரிகிறது. இதனால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில்,

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 28 நாட்கள் நடைபெறும். அவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் சபையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்த போது பாராளுமன்றத்தை பல கட்டங்களில் செயல்பட விடாமல் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது சபையின் கண்ணியத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறார் வெங்கையா நாயுடு.

அவர் மேலும் கூறுகையில், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஈராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்வார். தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, ஆந்திர மறு சீரமைப்பு திருத்த மசோதா ஆகியவை பார்லியில் தாக்கல் செய்யப்படும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

பாராளுமன்றம் இன்று கூடும் நிலையில் சபையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் அனைத்து கட்சி கூட்டத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல், இ. கம்யூனிஸ்டு, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் முக்கியமாக விவாதிக்க வேண்டும் என்று இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அனைத்து கட்சி கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மக்களவையில் பின் வரிசையில் நின்று பேசுபவரை முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் காணும் வகையில் ஒளித்திரை அமைக்கப்படும். இது ஒரு புது முயற்சி என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. 54 உறுப்பினர்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். ஆனால் காங்கிரசுக்கு 44 எம்.பி.க்களே உள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வேண்டும் என்கிறார்கள் காங்கிரசார். இல்லாவிட்டால் வழக்கு போடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இந்த பிரச்சினை எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!