முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் நிலையங்களை புதுமைப்படுத்த திட்டம்!

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 8 - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சுமார் ஒரு மாதம் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இன்று ரயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகள் அனைத்தையும் ரயில்வே மந்திரி முடித்து விட்டார். பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம், புறநகர் ரயில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. எனவே இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை.

ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் புதிய திட்டங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அறிவிப்புகள் வெளியாகும். பெரும்பாலான ரயில் விபத்துக்களுக்கு ரயில் தண்டவாள விரிசல் காரணமாக கூறப்படுகிறது. எனவே ரயில் தண்டவாளங்கள் விரிசலை தடுக்க நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் திட்டம் இன்று வெளியாகலாம்.

பயணிகள் பாதுகாப்புக்கான ரயில்வே குழு பல்வேறு வகை ஆய்வுகளை நடத்தி ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் புதிய தண்டவாளங்கள் அமைக்கவும், ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளை அகற்றுவது உள்பட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு பயணிகள் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த அந்த நிபுணர் குழு ஆலோசனை கூறியுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

சில வழித்தடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்தகைய வழித்தடங்களை கண்டுபிடித்து அவற்றில் விரிசல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் எக்ஸ்ரே கருவிகள் பொருத்துவது பற்றிய புதிய திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. மழை, வெயில் காலங்களில் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் மாற்றத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் விசேஷ கருவிகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் திட்டமும் வரவுள்ளது. இவை தவிர பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகள் அளிக்கும் அறிவிப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக முக்கிய ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளது. விமான நிலையங்களுக்கு இணையாக ரயில் நிலையங்களில் புதுமைகள் கொண்டு வர ஆய்வு நடந்து வருகிறது. பிளாட்பாரங்களில் எல்லா நவீன வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 163 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

ரயில்வே வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையிலான அறிவிப்புகளும் இன்று வரவுள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்கள் அருகில் உள்ள இடங்கள் காலியாக சும்மா கிடக்கின்றன. அந்த காலி இடங்களை தனியார்களுக்கு வாடகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது போல பிளாட்பார காலி இடங்களில் கூடுதல் கடைகளை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இவை தவிர ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளிலும் தனியார் முதலீட்டை அதிகரிக்க செய்யும் திட்டங்களும் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல்கள் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிக்கெட் பயண நிலை பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தகவல் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு கட்டண வருமானம் உயர்த்தும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது. சரக்குகளை எடுத்து செல்ல இனி பெரிய ரயில் பெட்டிகள் பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரக்கு போக்குவரத்தில் மேலும் 17 வகை பொருட்கள் கொண்டு செல்லும் அனுமதியும் இந்த பட்ஜெட்டில் வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!