முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

லார்ட்ஸ், ஜூலை - 22 - நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 223 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
23 ஓவர்கள் 6 மைடன்கள், 74 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி. தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சைச் சாதித்தார் இஷாந்த் சர்மா. இவரது இந்த ஆவேசப்பந்து வீச்சினால் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் சேத்தன் சர்மாவின் ஆக்ரோஷத்திற்கு தோல்வி கண்ட இங்கிலாந்து இப்போது மற்றொரு சர்மாவிடம் வீழ்ச்சி கண்டது. 50 ரன்களில் கடைசி 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
நேற்று நடந்த ஆட்டத்தில் 105/4 என்று துவங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்களான ஜோ ரூட், மற்றும் மொயீன் அலி இந்தியாவுக்கு சில நெருக்கடியான தருணங்களைக் கொடுத்தனர். அலியும், ஜோ ரூட்டும் இணைந்து 5வது விக்கெட்டுகளுக்கு 101 ரன்களைச் சேர்த்தனர். இஷாந்த் சர்மா துவக்கத்தில் ஆஃப் வாலி பந்துகளாக வீச சில பவுண்டரிகளை விளாசினர். ஆட்டம் உணவு இடைவேளையை நெருங்கிய தருணத்தில் ஏதாவது விக்கெட் விழுமா என்று தோனி எதிர்பார்த்த தருணத்தில் தொடங்கியது இஷாந்த்தின் முதல் பவுன்சர் விக்கெட்.

இஷாந்த் சர்மா வீசிய பந்து ஒன்று ஆக்ரோஷமாக எழும்ப பந்திலிருந்து கண்களை எடுத்து விட்டார் மொயின் அலி பந்து கிளவ்வில் பட்டு ஷாட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் ஆனது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 173/5. என்று இருந்தது. ஜோ ரூட் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். மொயீன் அலி 147 பந்துகள் போராடி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இஷாந்த்தின் ஆவேசம் இந்தியாவுக்கு ஒரு அரிய அயல்நாட்டு வெற்றியை ஈட்டித் தந்தது.

பின்னர் பிரையர் களமிறங்கியவுடன் ஷாட் பிட்ச் பவுன்சர் தாக்குதலைத் தொடர்ந்தார் இஷாந்த், ஆனால் பிரையர் 2 பவுண்டரிகளை விளாசி 12 ரன்கள் எடுத்திருந்தபோது தோனி 2 ஃபீல்டர்களை டீப் ஸ்கொயர் லெக் மற்றும் மிட்விக்கெட்டிற்குக் கொண்டு சென்றார். மீண்டும் பவுன்சர் புல் ஆடினார் மேட் பிரையர் பந்து நேராக முரளி விஜய்யிடம் கேட்ச் ஆனது.
அடுத்ததாக ஆட்டத்தின் 82வது ஓவரின் 2வது பந்தில் ஸ்டோக்ஸ் மீண்டும் இஷாந்த் சர்மாவின் ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார். பந்து சரியாக மட்டையில் சிக்காமல் புஜாராவிடம் கேட்ச் ஆனது. ஸ்டோக்ஸ் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்ததாக 66 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட், அதே ஓவரின் 5வது பந்தில் இன்னொரு இஷாந்த் ஷாட் பிட்ச் பந்தை புல் ஆடினார். பந்து நேராக மிட்விக்கெட்டில் ஸ்டூவர்ட் பின்னி கையில் கேட்ச் ஆனதால் கடும் அதிருப்தியுடன் அவர் வெளியேறினார்.
ஸ்டூவர்ட் பிராடிற்கு ஒரு ஓவர் முழுதும் பவுன்சராகவே வீசினார், இஷாந்த், இதில் ஒரு பந்து அவரையறியாமல் கை கிளவ்வில் பட்டு லெக் திசையில் பவுண்டரி ஆனது. அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுன்சர் லெக் திசையைக் குறிவைக்க பிராட் தொட்டார், தோனி அருமையாக அதனை லெக் திசையில் பிடித்தார். இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகள்.
கடைசியாக ஆண்டர்சன், ஜடேஜா ஓவரில் ஒரு பந்தை சற்றே அருகில் ஆஃப் திசையில் தள்ளி விட்டு ஒரு ரன் எடுக்க ஓடி வந்தார். பிளன்கெட் வாளாயிருந்தார். ஜடேஜாவே ஓடிச் சென்று பந்தை எடுத்து நேராக ஸ்டம்பில் அடித்தார் ஆண்டர்சன் ரன் அவுட் ஆனார். ஆண்டர்சனைத் தன் கையால் ரன் அவுட் செய்ததை ஜடேஜா கொண்டாடினார்.
தோனி வழக்கம்போல் ஒரு ஸ்டம்பைக் கையில் எடுத்துக் கொண்டார். இங்கிலாந்து 88.2 ஓவர்களில் 223 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் அஜின்கியா ரஹானேயின் அபாரமான சதம் பிறகு புவனேஷ் குமாரின் அயராத பந்து வீச்சு, பிறகு 2வது இன்னிங்ஸில் முரளி விஜய், புவனேஷ் குமார், ஜடேஜா ஆகியோரது பேட்டிங், கடைசியாக இஷாந்த் சர்மாவின் ஆவேசம் என்று ஒரு அணியாக இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு ஒரு அரிய வெற்றியை இங்கிலாந்தில் சாதித்துள்ளது. ஆட்டநாயகனாக இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.இந்தியாவின் இந்த வெற்றிக்கு 7 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, 2வது இன்னிங்ஸில் 68 ரன்களைக் குவித்து, 3 விக்கெட்களைச் சாய்த்த ஜடேஜா, 52 ரன்கள் குவித்து, 6 விக்கெட்களையும் சாய்த்த புவனேஸ் குமார் ஆகியோர்தான் முக்கியக் காரணம். அதேபோல 95 ரன்கள் குவித்த முரளி விஜய்யும் பாராட்டுக்குரியவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்