முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மல்யுத்த வீரர்கள் பதக்கம் குவித்து சாதனை

புதன்கிழமை, 30 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஜூலை.31 - காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மல்யுத்த வீரர்களின் திகைக்க வைக்கும் விளையாட்டால் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் 5-ஆம் நானாள் நேற்று முன் தினம் மல்யுத்தப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். 2 முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவரான இந்தியாவின், சுஷீல் குமார் ஆடவர் 74 கிலோ எடைப்பிரிவில் பிரீ ஸ்டைல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் குவமா அப்பாசை எதிர்கொண்டார். முன்னாள் உலக சாம்பியனான சுஷீல் குமார், அப்பாசை வீழ்த்த 107 விநாடிகளே எடுத்துக் கொண்டார். சுஷீல்குமார் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்த போது, அப்பாசை கிழே தள்ளி மடக்கினார்.

அத்துடன் போட்டியை நிறுத்திய நடுவர் கீலன், சுஷீல்குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 2010-ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தவரான சுஷீல்குமார் நேற்றைய முன் தினத்தின் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.

ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான அமித் குமார் நைஜீரியாவின் வெல்சனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் அமித் குமார் 6 புள்ளிகளையும், வெல்சன் 2 புள்ளிகளையும் பெற்றனர். இறுதியில் நடுவர்களின் முடிவின் அடிப்படையில் அமித் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் மல்யுத்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது வீராங்கனை வினேஷ்போகத், இங்கிலாந்தின் யானா ராட்டிகானை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் 11-8 என்ற புள்ளிக்கணக்கில் யானாவை வீழ்த்திய வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2010-ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தந்த கீதா போகத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்தப்போட்டியில் ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு பிரீ ஸ்டைல் அரையிறுதிப் போட்டியில் கனடாவின் கோரே ஜார்விசை வீழ்த்தி இந்தியாவின் ராஜீவ் தோமார் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த மல்யுத்த வீரர்களின் தங்க வேட்டையின் மூலம் 7-வது இடத்தில் இருந்த இந்தியா 10 தங்கப்பதக்கம், 15 வெள்ளிப்பதக்கம், 11 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 36 பதக்கங்கள் பெற்று 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்