முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வீரர்கள் இருவருக்கு தலா ரூ.30 லட்சம்: முதல்வர்

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

சென்னை,ஆக.3 - காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் அச்சந்தா சரத் கமல் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டிகளில் 141 பதக்கங்களை வென்று இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. 13 தங்கம் உள்பட 53 பதக்கங்களை வென்று இந்தியா 5-து இடத்தில் உள்ளது. இந்த போட்டிகளில் தமிழக வீரர்களும் அபார சாதனை படைத்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பளு தூக்கும் போட்டியில் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற இவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை வரவேற்ற சதீஷின் பெற்றோர்கள் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்தநிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் டேபிள் டென்னீஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அச்சந்தா சரத்கமலும் அமல்ராஜூம் வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெள்ளிப்பதக்கம் வென்ற இவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:- தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் நீங்கள் வெள்ளிப்பதக்கத்தை வென்றதன் மூலம் இந்த நாட்டுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த மகத்தான சாதனை படைத்தமைக்காக தமிழக மக்களின் சார்பாக எனது இதயப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகையை 2011-ம் ஆண்டு டிசம்பரில் நான் உயர்த்தி அறிவித்தது தெரியும். அந்த அறிவிப்பின்படி வெள்ளிப்பதக்கம் வென்ற நீங்கள் ரூ.30 லட்சத்தை பெற தகுதியுள்ளவர். அதன்படி உங்களுக்கு ரூ.30 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். உங்கள் வெற்றிக்கும், உங்கள் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் இந்த தேசத்தின் சார்பாகவும் தமிழகத்தின் சார்பாகவும் மீண்டும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்கள் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற அமல்ராஜ், காமன்வெல்த் போட்டியில் வென்ற 2-வது பதக்கம் இது. ஏற்கனவே 2010-ல் நடந்த போட்டியில் அமல்ராஜ், வெண்கலப்பதக்கம் வென்றவர். இதேபோல் அச்சந்தா சரத்கமலும் காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்துள்ளார். அவர் பெற்ற 6-வது பதக்கம் இது. இந்த தகவல்களை முதல்வர் தனது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த சுஷில்குமார் நேற்று நாடு திரும்பினார். ரசிகர்கள் மலர்மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்