முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிப்பு

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 15 – இந்தியாவில் 67–வது சுதுந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் களை கட்டியுள்ளன.

தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதற்காக அப்பகுதியில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருப்பதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் பலத்த சோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருடன் இணைந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 5–ந்தேதியில் இருந்தே விமான நிலையத்தில் பார்வையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த தடை வருகிற 20–ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கார்கள் நிறுத்தப்படும் பார்க்கிங் ஏரியா மற்றும் விமான நிலையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் செல்லும் ஏமன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தப் போவதாக இ.மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானத்தில் மஸ்கட் செல்ல இருந்த ஜெய்ப்பூர் பயணி ஒருவருக்கு நேற்று முன்தினம்மாலையில் இ.மெயில் ஒன்று வந்தது. அதில் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் செல்லும் விமானத்தை கடத்தப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பதட்டம் அடைந்த அவர் அங்குள்ள விமான நிலைய அதிகாரிகளிடம் மிரட்டல் இ.மெயில் குறித்து தகவல் தெரிவித்தார்.

உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. அங்கிருந்து மஸ்கட் புறப்பட்டு சென்ற ஓமன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் அனைவரையும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னைக்கு நேற்று மாலை 6.15 மணிக்கு மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.

இதன் பின்னர் இரவு 10 மணி அளவிலேயே ஜெய்ப்பூர் பயணிக்கு வந்த இ–மெயில் மிரட்டல் குறித்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் மாலையில் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 7.15 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மஸ்கட் செல்லும். இந்த விமானத்தில் பயணம் செய்ய தயாரான நூற்றுக்கணக்கான பயணிகள் 2 முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகே விமானத்தில் ஏறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 8 மணி அளவிலேயே இங்கிருந்து புறப்பட்டு சென்றது. இ–மெயில் மிரட்டல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்