பாக்., ராணும் 10 நாட்களில் 11-வது முறையாக அத்துமீறல்

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஆக.19 - ஜம்மு- காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா பகுதிகளில் உள்ள நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றுமுன்தினம் இரவு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு முழுவதிலும் சிறு சிறு இடைவேளைகளில், 20 இந்திய எல்லை பாதுகாப்பு நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இருத்தரப்பு தாக்குதலும் நேற்றுக்காலை 6.30 மணி வரை நீடித்தது. இதில் அட்டார் சிங் என்ற கிராமவாசி ஒருவர் காயமடைந்தார். கடந்த 10 நாட்களில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 தடவை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஆனால் இந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறலில், இந்த தாக்குதல் மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது.

இந்தியா– பாகிஸ்தான் இடையே சுமூக சூழல் ஏற்பட, பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் அமைதி பேச்சு நடைபெறுவதற்கான சாத்தியங்கள் ஏற்படாத நிலை உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி சூழலை ஏற்படுத்த இரு நாட்டு வெளியுறவுத்துறையும் முயற்சியெடுத்து வருகின்றன. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங், பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர் அஜிஸ் அகமது சவுத்திரி இருவரும் வருகிற 25-ஆம் தேதி இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் நெடுங்காலமாக நீடித்து வரும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய எல்லையில் கடந்த ஒரு வாரக் காலமாக பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: