தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம்: கேமரூன்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், செப்.03 - ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காகப் போரிடுவதற்காக, ஈராக், சிரியாவுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் செல்வதைத் தடுக்கவும், அந்நாடுகளில் இருந்து அவர்கள் திரும்பி வந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை முறியடிக்கவும் கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தார்.

ஐஎஸ் பயங்கரவாத அணைப்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சேர்ந்திருப்பதாகவும், மேலும் பலர் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து பாராளுமன்ற கீழவையில், அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்ததாவது:

போரில் ஈடுபடுவதற்காக ஈராக், சிரியாவுக்கு பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் செல்வத்தைத் தடுக்கவும், அங்கிருந்து திரும்புவோர் சொந்த நாட்டில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்படி தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பாஸ்போர்ட்களை பறிக்கவும், பிரிட்டனுக்குள் அவர்கள் நுழைவதற்குத் தாற்காலிகத் தடை விதிக்கவும் போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இதன் கடுமையை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளைத் தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தீவிரவாதிகள் என்று கருதப்படும் வெளிநாட்டினரைத் தடுக்க போதிய சட்ட அதிகாரங்கள் உள்ளன. அதேநேரத்தில் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷாரைத் தடுக்க தற்போதைய சட்டத்தில் வழி இல்லாததால் இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று கேமரூன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: