முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்பு தானம்: 5 பேருக்கு மறுவாழ்வளித்த சிறுமி

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், அக் 1 - மூளையில் கட்டி ஏற்பட்டு உயிரிழந்த மூன்று வயது சிறுமியின் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சீனாவை சேர்ந்த லியு ஜிங்யாவோ என்ற மூன்று வயது சிறுமியின் நடை இயல்பாக இல்லை என்பதை அறிந்து அவரது பெற்றோர்கள் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற சென்றனர். அவருக்கு ஏராளமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சிகிச்சைக்காக பல்வேறு நகரங்களுக்கு அவரை அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி லியு ஜிங்யாவோ நலம் பெறவில்லை. அவரது மூளையில் கட்டி உருவாகி இருப்பது தெரியவந்தது. இதனிடையே அவரது தலை வீக்கம் அடைய தொடங்கியது. மேலும் அவரது பேச்சு திறன் குறைய தொடங்கி, படுத்த படுக்கையானார்.

லியுஜிங்யாவோ உயிர் பிழைக்க முடியாது  என்பது உறுதியானதும் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிப்பது என பெற்றோர்கள் முடிவு செய்தனர். இது குறித்து லியுவின் கருத்தை அவர்கள் கேட்டனர். தானம் என்ற சொல்லை அந்த 3 வயது குழந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து அக்குழந்தையிடம் பேசிய அவரது தந்தை உனது உடலில் இருந்து சில பகுதிகளை எடுத்து பிறருக்கு கொடுத்து அவர்களை காப்பாற்ற உதவி செய்வாயா என்று கேட்டார். அதற்கு குழந்தை லியு சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கிழக்கு சீனா, ஜியாங்சி மாகாணத்தில் உள்ள  பொது மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அச்சிறுமியின் உயிர் பிரிந்தது. உடனடியாக அவரது உறுப்புகளை வேறு சிலருக்கு பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல், கருவிழிகள் ஆகியன 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூன்று வயது சிறுமி என்பதால் அவருடைய உறுப்புகள் மிக சிறியதாக இருந்தன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 5 பேர் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள நீதான் உலகின் மிக அழகிய இளவரசி என அவரது தந்தை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்