பாக்., முன்னாள் பிரதமர் மகன் கொலை வழக்கில் கைது

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், அக்.10 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியின் மகன் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் முன்னாள் பிரதமர் யூசுப் கிலானி உட்பட பல்வேறு மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், தாஹிர் மாலிக், என்ற வாலிபர், முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியின் வீட்டுக்கு அருகே விஐபி பகுதியில் மோட்டார் சைக்கிளில், சென்றார். அப்போது யூசுப் கிலானியின் மூத்த மகன் அப்துல் காதிர் உட்பட 5 பாதுகாவலர்கள் தாஹிரை தடுத்தனர். கிலானியின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தெருவுக்கு செல்ல வேண்டும் என்று தாஹிர் கூறினார்.

அவரை திரும்பி போகுமாறு பாதுகாவலர்கள் எச்சரித்தனர். அதை தாஹிர் பொருட்படுத்தவில்லை. தடையை மீறி செல்ல முயன்ற போது அவரை பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாஹிரின் தந்தை தன்வீர் ஜாவேத் போலீசில் புகார் செய்தார். யூசுப் கிலானியின் வீட்டின் முன் இறந்துபோன மகனின் உடலை வைத்து தன்வீர் ஜாவேத் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஐபி கலாசாரத்துக்கு எதிரான போர் என்று தெக்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும் ஆதரித்தார். இதைத் தொடர்ந்து விஐபி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கையும் தராமல், அப்பகுதி சாலை வழியே சென்ற ஒருவரை சுட்டு கொன்றது தீவிரவாத செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் யூசுப் கிலானியின் மகன் அப்துல் காதிர் உட்பட 5 பாதுகாவலர்கள் மீது கொலை மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்துல் காதிர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: