மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பலி எண்ணிக்கை உயர்வு

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, அக் 12 - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான வைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனி ஆகிய 3 நாடுகளில் கடந்த ஆண்டு முதல் எபோலா நோய் தாக்க துவங்கியது. ஒரு மனிதனின் உடலில் இருந்து உமிழ்நீர், ரத்தம் மற்றும் சிறுநீர் போன்றவற்றின் மூலம் எபோலா நோய் பரவ தொடங்கியது. எபோலா நோயை தடுப்பதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எபோலா பரவாமல் தடுக்க எபோலா நோயாளிகள் தனி அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர். கடந்த 8ம் தேதி வரை 8399 பேருக்கு எபோலா நோய் தாக்கியுள்ளதாக பதிவாகியுள்ளது. இவர்களில் 4033 பேர் உயிரிழந்து விட்டனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனி ஆகிய 3 நாடுகளில் மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் ஊழியர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மூலம் மேலும் நைஜீரியா, செனகல், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு எபோலா நோய் பரவி உள்ளது. லைபீரியாவில் எபோலா நோய் தாக்கிய 4076 பேரில் 2316 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லியோனியில் 2950 பேருக்கு எபோலா தாக்கியதில் 930 பேர் பலியாகி விட்டனர். கினியாவில் 1350 எபாலோ நோயாளிகளில் 778 பேர் பரிதாபமாக இறந்தனர். நைஜீரியாவில் பாதிக்கப்பட்ட 20 பேரில் 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒருவர் பலியாகி உள்ளார். இம்மூன்று நாடுகளில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இது வரை எபோலா நோய் தாக்கிய 416 பேரில் 233 பேர் பலியாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: