முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால் தான் மீனவர்கள் விடுதலை

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை
மக்களின் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட இடைவிடாத தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவே இலங்கை யில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் தமிழ்நாட்டில்உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் நலன் மற்றும் தமிழர் வாழ்வின் வளம் ஆகியவற்றுக்காக இடையறாது பாடுபட்டு வருபவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க பலப்பல புதுமைத் திட்டங்களை வடிவமைத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்கள் சிறப்புற பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு இந்தத் திட்டங்களை தொடர்ந்து செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
மிகவும் பழமை வாய்ந்த தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழில் மூலம் உயர்தர புரதச் சத்துடன் கூடிய தரமான உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும் தமிழக மீனவர்கள் முன்னோடியாக விளங்குகிறார்கள். மீனவர்களின் நலனில் தனி அக்கறை செலுத்தி வருபவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். எனவே தான் 2011 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற அன்றே மீனவர்களின் நலன் பேணும் வகையில், மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை 1000 ரூபாயை 2000 ரூபாய் என இரட்டிப்பாக்கி உத்தரவிட்டார்கள். மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்தினார்கள். கடல் மீனவ மகளிருக்கு மீன்பிடி குறைவாக உள்ள காலங்களில் 2,700 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம்; கடல் மீனவர்களுக்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் 2700 ரூபாய் உதவித் தொகை வழங்குதல் என பல்வேறு நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிவாரணத் திட்டங்களுக்காக, ஆண்டொன்றுக்கு 166 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், மீனவர்களுக்கான குழுக் காப்பீடுத் திட்டத்தில் 50 விழுக்காடு சந்தாத் தொகையை தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. இதில் 6.51 லட்சம் மீனவர்கள் பயன் பெறுகின்றனர்.
பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை எந்திரமயமாக்கும் வகையில் நாட்டுப் படகுகளில் இயந்திரங்கள் வாங்கிப் பொருத்துவதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் எந்திரமயமாக்கப்பட்ட நாட்டுப் படகுகளில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு விற்பனை வரி அறவே விலக்களிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையிலான மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் மாதமொன்றிக்கு 250 லிட்டர் வழங்கப்படுகிறது.
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களின் தரத்தினைப் பாதுகாத்து, அவற்றின் மதிப்பினைக் கூட்டி மீனவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், மீன் பதனிடும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் ஆற்று முகத்துவாரங்களை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் 508 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தொலைதூர கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக புதிய சூரை மீன் படகு கட்டுவதற்கான ஆகும் உத்தேச செலவான 60 லட்சம் ரூபாயில் 50 விழுக்காடு, அதாவது 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் ஒரு உன்னதமான திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை மீட்க இடைவிடாத நடவடிக்கைகளை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். 2011-ஆம் ஆண்டு அஇஅதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு 56 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
ஈரான் நாட்டுச் சிறையில் வாடிக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து தமிழகம் திரும்பிய அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படுத்த 2 லட்சம் ரூபாயை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கினார்கள். ஒடிசா மாநிலத்தில் புயலில் சிக்கித் தவித்த 18 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள். சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 மீனவர்களை மீட்டெடுக்க மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான். எனவே, கச்சத் தீவை தாரை வார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கக் கோரி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். தமிழக அரசின் வருவாய்த் துறையும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் போனது கச்சத் தீவு ஒப்பந்தத்தினால் தான். தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டி விட்டார்கள் என சிறை பிடிக்கப்படுவதும், மீனவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்த காரணத்தால் தான். எனவே தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசும், கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், பராம்பரிய மீன்பிடி இடங்களில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த திருவாளர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன்பிடி விசைப்படகில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் மீது யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்துதல் குற்றத்திற்கான பிரிவின்கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்றை இலங்கை அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதால், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அப்போதைய பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியதோடு, இந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்க மீனவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் இராமேசுவரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு (ஹடடயைnஉந கடிச சுநடநயளந டிக ஐnnடிஉநவே குiளாநசஅநn கூசரளவ) மூலம் நடவடிக்கை எடுத்திட 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி 14.12.2011 அன்று ஆணையிட்டார்கள்.
தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது 11.6.2012 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மீனவர்களின் நலன் காப்பதில் எப்போதும் முன் நிற்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். மீனவர்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது அஇஅதிமுக அரசு தான். இலங்கை அரசால் பொய் வழக்கு போடப்பட்ட உடனேயே, அந்தப் பொய் வழக்கினை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். இது பன்னாட்டுப் பிரச்சனை என்ற காரணத்தால், இலங்கை அரசுடன் தமிழ்நாடு அரசு நேரடியாக எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள இயலாது. இலங்கை அரசுடன் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மட்டுமே தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். தனது இந்தத் தார்மீகக் கடமையை மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தமிழ்நாடு அரசும் ஆகும். அதற்கேற்ப, மத்திய அரசு செயல்பட்டு, 5 தமிழ்நாடு மீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியதாகும். இந்த வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென இங்கே உள்ள ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களை கொச்சைப்படுத்துவது ஆகும். தங்களால் தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழ்நாட்டில் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கடந்த மூன்றாண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்? இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உடனடியாக தாக்கல் செய்யப்பட 20 லட்சம் ரூபாய் அனுப்பும்படி இந்திய தூதரகம் கேட்ட போது, அந்தப் பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தது, மீனவர் நலனில் என்றும் அக்கறை செலுத்தும் அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பினை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தும் ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்; ஒரே அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்களின் நலனுக்காக எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் எந்தவித இன்னலுக்கு ஆட்பட்டாலும், ஓடோடிச் சென்று, அவர்கள் துயர்துடைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பேணிப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அஇஅதிமுக அரசுதான். உண்மையான மீனவ நண்பன் யார் என்பதும் தமிழ்நாடு மீனவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாடு மீனவர்கள் நலன் காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து