முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை நீர்மட்டத்தை 152 அடியாக ஜெயலலிதா உயர்த்துவார்: அமைச்சர்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று 152 அடியாக உயர்த்தி காட்டுவார் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்திக் கொடுத்து தென்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீதியினை பெற்றுத் தந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் புதூர் கே. துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, எம்.குமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.கே. முத்திருளாண்டி, வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.ஜெயபால், பெ.சாலைமுத்து, தளபதி மாரியப்பன், பி.எஸ்.கண்ணன், என்.முருகன், கே.ஜெயவேல், பூமிபாலகன், எஸ்.டி.ஜெயபால், ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சருமான நத்தம் இரா.விஸ்வநாதன், கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத், தலைமை கழக பேச்சாளர் வடுகபட்டி சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில் மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா. ஆர்.சுந்தர்ராஜன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், துணைமேயர் கு.திரவியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.பி. முத்துமணி, மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, பரவை பேரூர் கழக செயலாளர் சி.ராஜா, பெ.இந்திராணி, பெ.சீத்தாராமன், எம்.தமிழ்செல்வன், கே.ரமணி, டி.வினோத்குமார், வில்லாபுரம் விஜயகுமார், எஸ்.முருகேசன், வக்கீல் ரமேஷ், சக்திவிநாயகர் பாண்டியன், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, புதூர் அபுதாகீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஷ.ராஜலிங்கம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
மாடுகட்டி போரட்டித்தால் மாளாது என்று ஆனைகட்டி போரடித்தால் தான் மாளும் என்று சங்க இலக்கியங்களில் மதுரைக்கு ஓர் பெருமை உண்டு. அப்படிப்பட்ட நெற்களஞ்சியமாக விளங்கிய பகுதி இந்த தென்மண்டல பகுதி. இப்படி பெருமை வாய்ந்த உழவுத்தொழில் விவசாயம் வாழ்வாதாரம் வீழ்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டபோது எதற்கும் அச்சப்பட வேண்டாம், நானிருக்கிறேன் என்று அம்மா அவர்கள் இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக தீர்க்கப்படாத முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை தீர்த்துவைத்து தென்மாவட்ட விவசாய மக்களின் காவல் தெய்வமாக அம்மா அவர்கள் உள்ளார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2002 ஆண்டு முதல் மாபெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி 2006இல் மிகப்பெரிய தீர்ப்பினை பெற்றுத் தந்தார்கள். அதனை நடைமுறைப்படுத்தாமல் கருணாநிதி கிடப்பில் போட்டதால் கேரளா அரசு அணை பாதுகாப்பு சட்டம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி முல்லை பெரியாறு அணையை உடைக்க சதிதிட்டம் செய்தபோது கருணாநிதி எதுவும் செய்யாமல் இருந்தார்.
பின் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் முல்லை பெரியாறு பிரச்சனைக்கு கடுமையான குரல் கொடுத்தபோது திடீர் என்று கருணாநிதி முல்லை பெரியாறு பிரச்சனைக்காக மத்திய அரசை கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று கூறினார். உடனடியாக காங்கிரஸை சேர்ந்த குலாம் நபி ஆஸாத் கருணாநிதியை சந்தித்து கனிமொழிக்கு 2ஜி வழக்கு உள்ளது என்று கூறியபின் கருணாநிதி மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஜெயராம் மிஸ்ராவை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று கூறினார். பின் அதைக் கிடப்பில் போட்டு கேரளா அரசை கண்டித்து கண்டன கூட்டம் என்று கூறினார். ஆனால் எதையுமே அவர் செய்யவில்லை. ஏனென்றால் முல்லை பெரியாறுக்கு குரல்கூட கொடுக்கமுடியாமல் தெம்பு திராணியற்றவராக கருணாநிதி இதன் மூலம் வழங்கினார். ஏனென்றால் அவர் மடியில் கனம். அதனால் அவர் செய்யமுடியவில்லை. அதேபோல்தான் காவேரி பிரச்சனையிலும் தமிழகத்திற்காக கருணாநிதி எதுவும் செய்யவில்லை. மாறாக, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முல்லை பெரியாறு, காவேரி போன்ற ஜீவாதார பிரச்சனைகளுக்கு போராடிய போதெல்லாம் கருணாநிதி முட்டுக்கட்டை போட்டு பல்வேறு குறுக்கு வழியில் பல சூழ்ச்சிகள் செய்தார். அதையெல்லாம் அம்மா அவர்கள் தவிடு பொடியாக்கி முல்லை பெரியாறுக்காக மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்திக் கொடுத்துள்ளார்கள். இதேபோல் மீனவர் பிரச்சனையானாலும் சரி, தமிழ் மக்களுக்கு எதிராக எந்தப் பிரச்சனையானாலும் அம்மா அவர்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. எந்த அரசாக இருந்தாலும் சரி எதிர்த்து கடுமையாக போராடி குரல் கொடுப்பார்கள். தற்போது மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று கூறுவதை சிலர் தங்களின் அரசியல் பிழைப்பிற்காக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இதன் மூலம் ஒரு கருத்தை கூறுகிறேன். ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். அந்த மக்கள் தான் 2001 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எங்களைப் போன்றவர்களுக்கு வாக்களித்தார்கள். இது 5 ஆண்டுகளுக்கு பொருந்தும். இதன் மூலம் மக்கள் முதல்வர் அம்மா தான் என்று மக்கள் மனதில் நிலையாக உள்ளது. அதேபோல் மேலும் அத்தாட்சியாக அம்மா தான் வருங்காலங்களில் தமிழகத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்று கருதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் இமாலய வெற்றியை மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு மக்கள் தந்தார்கள். இது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்கள் கொடுத்த தீர்ப்பாகும். நிச்சயம் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் சட்டத்தின் மூலம் வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக வருவார்கள். தற்போது முதல்கட்டமாக 142 அடியாக இருக்கும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் காட்டுவார்கள் என்று அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை முதல்கட்டமாக 142 அடியாக அம்மா அவர்கள் உயர்த்திக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் தென்மாவட்டங்கள் வளமான மாவட்டங்களாக மாறும். இதே மத்தியில் 17 வருடம் ஆட்சியில் பங்குபெற்ற கருணாநிதி முல்லை பெரியாறுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்தபோது அதை தடுக்கும் வண்ணம் 19 கொலை மிரட்டல்களை விட்டனர். ஆனால் அம்மா அவர்கள் தன் உயிரை துச்சமென மதித்து தென்மாவட்ட மக்களுக்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி அதில் முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்திக் காட்டுவேன் என்று கூறினார். அதன்படி இன்று 142 அடியாக உயர்த்திக் கொடுத்துள்ளார். அதேபோல் மதுரையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அம்மா அவர்கள் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் காட்டுவேன் என்று கூறினார். நிச்சயம் அம்மா அவர்கள் 152 அடியாக உயர்த்திக் காட்டுவார் என்று அவர் பேசினார்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
முல்லை பெரியாறு பிரச்சனையில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி 37 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியாக உயர்த்தி விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்தவர் அம்மா அவர்கள். ஆனால் கருணாநிதியோ முல்லை பெரியாறு பிரச்சனைக்காக எதையும் செய்யவில்லை. 2006ஆம் ஆண்டு அம்மா அவர்கள் முல்லை பெரியாறுக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார். அதன்பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அப்போது ஏற்பட்ட மழையால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அறிந்த கேரளா அரசு பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு பல்வேறு முட்டுக்கட்டை போட்டது. முல்லை பெரியாறுக்காக கேரளா முதலமைச்சர் அச்சுதானந்தன் 4 முறை பிரதமரை சந்தித்தார். ஆனால் கருணாநிதியோ ஒருமுறைகூட முல்லை பெரியாறுக்காக பிரதமரை சந்திக்கவில்லை ஏன்? ஒரு கடிதம் கூட எழுதவில்லை, ஏனென்றால் கருணாநிதியின் தொலைக்காட்சி நிறுவனங்கள் கேரளாவில் உள்ளது, அதற்காக வாய்மூடி மௌனியாக இருந்தார். இதே 2006ல் அம்மா அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வந்திருந்தால் அணைநீர்மட்டம் அப்போதே 142 அடியாக உயர்த்தியிருப்பார். தற்போது 152 அடியாகவும் அணைநீர்மட்டத்தை உயர்த்தி இருப்பார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வின் மூலம் தென்மாவட்டத்தில் 2 லட்சத்தி 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன்மூலம் தென்மாவட்டங்கள் வளம்பெறும். அம்மா அவர்கள் பொதுவாழ்வில் 12 பொய்வழக்குகளை எல்லாம் சந்தித்து தவிடு பொடியாக்கியது போல் தற்போது இந்த வழக்கிலும் சட்டத்தின் மூலம் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்வார்கள். நிச்சயம் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் காட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து