முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மில்கா சிங்-கிற்கு கொரோனா

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்தியாவின் தடகளத் துறையின் ஜாம்பவானாக விளங்கும் பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 91 வயதாகும் மில்கா சிங், அறிகுறிகள் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சண்டிகரில் உள்ள தனது வீட்டில் தன்னை சுயதனிமைப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள மில்கா சிங், என் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் என்னைத் தவிர அனைவருக்குக் நெகட்டிவ் எனவும் எனக்கு மட்டும் பாசிட்டிவ் எனவும் முடிவு வந்துள்ளது. நான் நலமாக இருக்கிறேன். காய்ச்சலோ, இருமலோ கிடையாது, நான் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமடைந்துவிடுவேன் இவ்வாறு மில்கா சிங் தெரிவித்தார்.

_______________

ரகசியம் உடைத்த டுபிளெசிஸ்

“2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். அந்தப் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது. என் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. நாங்கள் உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து வெளியேறினோம். எங்கள் நாட்டுக்குச் சென்றுவிட்டோம். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே அறிந்ததாக இருந்தது.

இதுபோன்ற குற்றத்துக்குரிய நிகழ்வுகள் அங்கு நடந்தன. ஆனால், மறுபடியும் நான் செல்லவில்லை. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதால், அணிக்குள் சிறிய குழுவாக இருக்க நாங்கள் தள்ளப்பட்டோம். எங்கள் அணிக்குள்ளேயே பாதுகாப்பான இடத்தை உருவாக்கவே நான் கடினமாக உழைத்தேன்” எனத் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்துள்ளார்.

_________________

டோனியை புகழும் ரெய்னா

ரெய்னா தான் எழுதும் ‘பிலீவ்’ என்ற தன் வரலாற்று நூலில் கூறியிருப்பதாவது., ஐபிஎல் முதல் ஏலம் நடந்த போது எல்லா வீரர்களைப் போலவும் எந்த அணி நம்மை தேர்வு செய்யப்போகிறதோ என்று டென்ஷனுடன் காத்திருந்தேன். கடைசியில் சென்னை அணி என்னை ஏலம் எடுத்தது.

இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது, ஏனெனில் டோனியுடன் ஆடப்போகிறோம் என்ற காரணத்தினால்தான். ஆனால் நான் சென்னை அணிக்கு ஆடப்போகிறேன் என்ற தகவலை எனக்கு முதலில் கூறியது யார் தெரியுமா? டோனிதான். மேலும் என் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக டோனி கூறியதை என்னால் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

____________

அபுதாபியில் பி.எஸ்.எல் டி-20

இந்த வருட பிஎஸ்எல் போட்டியின் 34 ஆட்டங்களில் 14 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைத்து ஆட்டங்களும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் ஆட்டங்களும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்களும் லாகூரில் நடைபெற இருந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 போட்டி அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஆட்டங்களும் எப்போது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

______________

ரோஜர் பெடரர் தோல்வி

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் அதிகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை. கோப்பையும் வெல்லவில்லை. 2 மாதங்களுக்கு பிறகு உள்ளூரில் நடந்து வரும் களிமண் தரை போட்டியான ஜெனீவா ஓபன் டென்னிசில் களம் இறங்கினார்.

இதில் நடந்த 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான பெடரர், தரவரிசையில் 75-வது இடம் வகிக்கும் பாப்லோ அந்துஜாருடன் (ஸ்பெயின்) மோதினார். 1 மணி 52 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் பெடரர் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். கடைசி செட்டில் 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பெடரர் அதன் பிறகு வரிசையாக 4 கேம்களை தவற விட்டு வீழ்ந்து போனார்.

___________

தாமஸ் பேச் நம்பிக்கை

ஒலிம்பிக் ஏற்பாடுகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், உள்ளூர் போட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டிக்கு கூடுதலாக மருத்துவ ஆலோசகர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

ஒலிம்பிக் கிராமம் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பாதுகாப்பான வழிகளில் நடைபெற வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவார்கள். அவர்களில் தற்போதைய தருணத்தில், 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் அல்லது ஒலிம்பிக் போட்டிக்குள் போட்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன். இந்த எண்ணிக்கை 80 சதவீதத்துக்கு மேல் உயர்வதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து