முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகபட்சமாக 35 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவானது. மேலும், கடல் காற்றால் காற்றின் ஈரப்பதம் அளவு 70 சதவீதம் வரை உள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குறைந்தபட்ச வெப்ப நிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் காணப்படும். கடற்கரையோர மாவட்டங்களில் 50 முதல் 80 சதவீதம் வரை காற்றில் ஈரப்பதம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் மிக கடுமையான வெப்ப அலை வீசும்" என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை (புதன்கிழமை) மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மே 1-ம் தேதிக்கு ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்ப தாக்குதல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் மே 1-ம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதற்கிடையே தமிழ்நாட்டில் வெப்ப அலை மே 1 முதல் 4-ம் தேதி வரை அதன் உச்சத்தை அடைய வாய்ப் புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "மே 1 முதல் 4-ம் தேதி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் உள்மாவட்டங்களில் மே 5-ம் தேதிக்குப் பின் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். இதனால், மே தொடக்கத்தில் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க ஆங்காங்கே அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் தண்ணீர், மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மாநில அரசு சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து