முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குதிரை திறன் எப்படி பெயர் வந்தது

வாகனங்களானாலும், மோட்டார் உள்ளி என்ஜின்களானாலும் அவற்றின் திறனை ஹார்ஸ் பவர் என்கிற குதிரை திறன் அலகாலேயே அளவிடுகிறோம் அல்லவா.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா.. குதிரைத் திறன் என்ற பிரயோகத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ்வாட். இவர் வேறு யாருமல்ல நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த பொறியாளர்தான். தான் உருவாக்கிய நீராவி எந்திரம் எந்த அளவுக்கு பொருள்களை இழுத்துக் கொண்டு எவ்வளவு வேகத்தில் செல்லும் என்பதை நிரூபிக்க, என்ஜினின் செயல் திறனை அளவிட வேண்டியிருந்தது. அந்தக் காலங்களில் சாரட் வண்டிகளில் குதிரைகள் பூட்டப்பட்டு இயக்கப்பட்டன. சாரட்டுக்கு மாற்றாக வந்த ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறனை கணக்கிட குதிரையின் வேகத்தை அளவிட அவர் முடிவு செய்தார். நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை மேலே இழுத்து வருவதற்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதைக் கருத்தில் கொண்டு 149 கிலோ எடையை சுமந்து கொண்டு 100 அடி தூரத்தை ஒரு நிமிடத்தில் கடப்பதை ஒரு குதிரைத் திறன் (1 ஹெச்.பி.) என அவர் கணக்கிட்டார். பின்னர் அதவே அறிவியல் பூர்வமான கணக்கீடாக மாறி ஹெச்பி - குதிரை திறன் என்றானது.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்பாடு முதன்முதலில் எப்போது வந்தன

கேரளத்தின் வடக்கு பறவூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 1982-ல் நடைபெற்ற இடைத்தேர்தலின்போதுதான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி ஆகிய இடங்களில் ஒரு சில தொகுதிகளில் பரிசோதிக்கப்பட்டன. முதன் முதலில் கோவா பேரவைக்கு 2003-ல் நடைபெற்ற தேர்தலில்தான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. அதையடுத்து, 2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

VoIP

நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும்  WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி பேசலாம்.  எப்படி தெரியுமா... நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே.  ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.  VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம். 

அதிவேக போலீஸ் கார்

புகாட்டி வேரோன் ரகக் கார், மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 2.5 விநாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் காரின் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாய். இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டதன் மூலம், அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள முதல் நாடு என்ற சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.

உறவுக்கு 'நோ'

சிம்பன்சி வகையைச் சேர்ந்த குரங்குகள், தனக்கு குழந்தை வேண்டும் என்றால், தனது ரத்த சம்பந்தம் இல்லாத சிம்பன்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ளுமாம். இதற்கு காரணம், தனது ரத்த உறவுகளை தவிர்த்து பிற ரத்த வகையை சேர்ந்த சிம்பன்சிகளுடன் கூடும் போது பிறக்கும் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதால்தான்.

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படங்களுக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. முதன்முதலில் 1929 இல் மே 16 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே விருதில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூடி முத்திரையிடப்ப்டு சீல் வைக்கப்பட்ட கவரில் வெற்றி பெறுபவரின் பெயரை அறிவிக்கும் வழக்கம் 1941 இல் தான் தொடங்கியது. 1940க்கு முன்பு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெற்றியாளர்களை அதன் மாலை பதிப்பில் முந்தைய நாளே அறிவித்துவிடுவதன் காரணமாகவே, 1941 இல் முத்திரையிடப்பட்ட கவர் முறை தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்