முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய தொழில்நுட்பம்

தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய குடும்பம் - உறுப்பினர்கள் எண்ணிக்கை 163

உலகின் மிகப் பெரிய குடும்பம் எங்குள்ளது தெரியுமா..இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சியோனா சனா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வியக்க வைக்கும் இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

இங்கிலாந்துக்கு ஆங்கிலம் எப்போது வந்தது தெரியுமா?

ஆங்கிலத்தின் தாயகம் இங்கிலாந்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுமார் 300 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது பிரெஞ்சு மொழிதான். 1066 க்கும் 1362 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக பிரெஞ்சுதான் இருந்தது. 1066 இல் வில்லியம் தலைமையிலான நார்மன் ஆட்சி வந்த போது, ஆங்கிலோ- நார்மன் பிரெஞ்சு மொழியை அறிமுகப்படுத்தினார். இந்த மொழியை பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள், செல்வந்தர்கள் ஆகியோர் பேசி வந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசக் கூட தெரியாது. பின்னர் 1362 இல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நார்மன் பிரெஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாமானிய மக்களுக்கு நீதி மன்றத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

புதிய ஆப்

இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய  ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்