முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஏப்.5 - இலங்கையில் நடைபெறக்கூடிய காமன்வெல்த் மாநாட்டை அங்கு நடத்தக்கூடாது என இந்தியா கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்தும், இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

பி.ஜே.பி.யின்  முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பி.ஜே.பி.யின் தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக மாணவர்கள் நடத்தக்கூடிய போராட்டம் என்பது இங்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலகன் பாலசந்திரன் முகத்தை பார்க்கும்போது யாருக்குத்தான் சோகம் வராது? அந்தப் படத்திலே பாலசந்திரன் தன் நெற்றியில் தோட்டாக்களை தாங்கியிருக்கிறான்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடந்த கொடூரமான தாக்குதலுக்கு இலங்கையை விட இந்தியாதான் முதல் காரணம்.2009-ல் நடைபெற்ற இறுதி தாக்குதல் நடந்தபோது அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியாதான் செய்துள்ளது. தாம் இது தொடர்பாக அரசிடம் நிர்ப்பந்தம் செய்தால் இலங்கைக்குள் சீனா வந்து விடும் என்கிறார்கள். நட்பு என்பது பரஸ்பரம் வர வேண்டும். இலங்கையின் வடக்கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்தலை வரும் ஜூன் மாதத்திலேயே நடத்தலாம். சர்வதேச கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக் கூடாது என இந்தியா எதிர்க்க வேண்டும். காமன் வெல்த் உறுப்பினர் நாடுகளில் ஒரு நாடு மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டால், அந்த நாட்டை சஸ்பெண்ட் செய்யலாம் என்று விதி உள்ளது. இந்தியா அங்கு மாநாடு நடத்தக் கூடாது என்று சொன்னாலே அங்கு மாநாடு நடக்காது. 

ராஜபக்சேவுக்கு நான் கூறுவது, தமிழர்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்தினால் அங்கு ஈழம் மலர்வதை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் தமிழிசை செளந்தர்ராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்