முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பிரச்சினைகளில் பா.ஜ.வுக்கு அக்கறை இல்லை: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - ஆரணி, வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பாரதீய ஜனதாவிற்கு எதிராகவும் தனது தாக்குதல்களை தொடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் தமிழக நலன் குறித்து எதுவும் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பாரதீய ஜனதாவிற்கு அக்கறையில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இது. மத்தியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இல்லாத ஆட்சி அமைய வேண்டும். இந்த தேர்தல் அண்டைய நாடுகளிடம் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல் என்று கூறியுள்ளார்.

ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட `வடதண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும், பின்னர் வேலூரில் , `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்தில் நடத்த பொதுக்கூட்டத்திலும் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகின்ற தேர்தல். 

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவை மீட்கும் தேர்தல், ஊழல் சாம்ராஜியத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்கின்ற தேர்தல், உங்களின் துன்பங்களை போக்குகின்ற தேர்தல், உங்களை துயரங்களிலில் இருந்து விடுவிக்கின்ற தேர்தல். காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் என்னென்ன பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை சொல்லி மாளாது.  விலைவாசி உயர்வு, பணவீக்கம், மாதா மாதம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை, வேளாண் உற்பத்தியில் மந்த நிலை என மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  இது போன்ற மோசமான அரசை நாம் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது.  இப்படி எல்லாவிதத்திலும் சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்து ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.  தமிழ் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நிகழ்த்திய கட்சி தி.மு.க.  இப்படி காங்கிரசும், தி.மு.க_வும் சேர்ந்து சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட கொடுங்கோல் அரசிடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. தமிழ் நாட்டிற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுகின்ற காலம் கனிந்துவிட்டது.  இந்த வாய்ப்பின் மூலம் உங்கள்  வாக்குரிமையை நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக செலுத்த வேண்டும் என்று சொல்வதற்காகத் தான் இன்று உங்களையெல்லாம் நேரில் சந்திக்க இங்கே வந்திருக்கிறேன்.   

2011_ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த அளவிற்கு வெற்றி பெற வைத்தீர்களோ, அதைவிட மகத்தான வெற்றியை வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே நான் இன்று இங்கே வந்திருக்கிறேன். எனது வேண்டுகோளினை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 

தமிழகத்திலே மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. கடந்த  34 மாத கால ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி, திமுக_வின் சதித் திட்டங்களையும் மீறி தமிழக மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை, தொலைநோக்குத் திட்டங்களை என்னால் தர முடியுமோ, அத்தனையும் அளித்திருக்கிறேன்; அளித்துக் கொண்டும் வருகிறேன். 

வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் தலையெழுத்தை, உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கப் போகின்ற தேர்தல். மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமான என்ஜின் வாங்கியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  இதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.  நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் மக்கள் விரோத  ஆட்சியை, முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.  அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.  இதனை உங்களால் தான்  சாதிக்க முடியும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)

காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மூலம் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் அறவிற்கு இந்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவதை குறிக்கோளாகக் கொண்டு, வருகின்ற தேர்தலில் 

நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பி.ஜே.பி.யின் பிடீம் என்றும், பி.ஜே.பி.யை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் யாருக்கும் '‘பி ' டீம் இல்லை என்பதையும், எங்கள் அணி தான் முதன்மையான அணி என்பதையும் நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன். 

காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி.அல்லாத ஆட்சி மத்தியிலே அமைய வேண்டும் என்பதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம் ஆகும்.  

இதை நான் 2012_ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுவிலேயே அறிவித்தேன். இந்த லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றே தீரவேண்டும். 

எனவே தான், இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 

40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.  

இந்த 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பிரச்சார கூட்டங்களில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசையும், அந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலே ஒன்பது ஆண்டு காலம் அங்கம் வகித்து தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு உறுதுணையாக இருந்த தி.மு.க_வையும் தான் எங்களால் கடுமையாக விமர்சிக்க முடியும். ஏனெனில், இந்தத் தேர்தலே காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற தேர்தல்.  தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், தமிழக மக்களை வஞ்சித்த கட்சி தி.மு.க.  எனவே, தி.மு.க_வின் பொய் முகமூடியை கிழித்தெறிய வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் விமர்சித்து வருகிறேன். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மகத்தான வெற்றி பெறும் போது என்னென்ன செயல் திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதைத் தான் நான் விளக்கமாக எடுத்துரைத்து வருகிறேன். தி.மு.க. மற்றும் இதரக் கட்சிகள் தாங்கள் என்ன செய்துள்ளோம், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை எடுத்துச் சொல்வதில்லை. அவர்கள் சொல்வது இரண்டே இரண்டு விஷயங்கள் தான்.  ஒன்று, ஜெயலலிதா பாரதப் பிரதமர் ஆகிவிடக் கூடாது. மற்றொன்று, தாங்கள் சுட்டிக் காட்டுபவர் தான் பாரதப் பிரதமர் ஆக வேண்டும்.  

ஆஒட_யை பொறுத்த வரை அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் காவேரி நதிநீர்ப் பிரச்சனை குறித்தோ, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்தோ, இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தோ, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தோ, கச்சத்தீவு பிரச்சனை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை.  எனவே, தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் பி.ஜே.பி._க்கு அக்கறை இல்லை என்று தான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1996_ஆம் ஆண்டு முதல் மத்தியிலே கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் க்ஷதுட தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் மத்தியில் ஆட்சி புரிந்துள்ளன. ஆனால், தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கக் கூடியது. 

தற்போதுள்ள சூழ்நிலையில் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை தான் உள்ளது.  அதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம்.  மத்தியிலே காங்கிரஸ் அல்லாத ஆட்சி; பி.ஜே.பி.அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம். இது போன்ற ஆட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென்றால், 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். அது போன்றதொரு சழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதை உங்களால் தான் சாதிக்க முடியும்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) அப்பொழுது தான், 

தமிழ்நாட்டின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழினம் பாதுகாக்கப்படும்.  சிறுபான்மையினர் நலன்கள் உறுதி செய்யப்படும்.  எனவே, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சிந்தாமல், சிதறாமல் நீங்கள் அளிக்க வேண்டும்.  தமிழர்கள் நலன்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆகியவற்றின் வேட்பாளர்களை அனைத்துத் தொகுதிகளிலும் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 

வாக்களப் பெருமக்களே மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கும் வலிமையை நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கினால், இப்போது நிகழ்த்தி வரும் சாதனைகளை விட  மிக அதிகமான சாதனைகளை நாங்கள் நிகழ்த்திக் காட்டுவோம். 

எனக்கு எல்லாமே நீங்கள் தான். உங்களால் தான் நான்.  உங்களுக்காகவே நான். எனக்கு தன்னலம் கிடையாது. எல்லாமே உங்கள் நலன் தான். தமிழ்நாட்டின் நலன் தான். தமிழக மக்களின் நலன் தான். தமிழக மக்கள் தான் என் மக்கள். 

எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி அமைய நீங்கள் எல்லாம் இரட்டை இலை$ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்