முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சி பாதித்த பகுதிகளுக்கு ரூ.714 கோடி நிவாரண திட்டங்கள்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 23 – காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள ரூ.32 கோடியே 95 லட்சம் செலவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளிக்கையில், அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உறுப்பினர்கள் அ. சவுந்தரராஜன்,கே. பாலபாரதி, க. பாலகிருஷ்ணன், கே. தங்கவேல், ஏ. லாசர், ப.டெல்லிபாபு, இரா. அண்ணாதுரை, க. பீம்ராவ், வி.பி. நாகைமாலி (மார்க்சிஸ்ட்) என். ஆர். ரங்கராஜன், எஸ். விஜயதரணி (காங்கிரஸ்), எம்.ஆறுமுகம், கே. உலக நாதன், கு. லிங்கமுத்து, பி.எல்.சுந்தரம், ஏ. பொன்னுபாண்டி, சு. குணசேகரன் (கம்யூனிஸ்ட்), மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, இ. பெரியசாமி, அர. சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.) எம்.எச். ஜவாஹிருல்லாஹ், அ. அஸ்லம்பாட்சா (மனித நேய மக்கள் கட்சி), ஆர். அருள்செல்வன், எஸ். செந்தில்குமார் (தே.மு.தி.க.), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் தமிழ்நாட்டில் சில பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒரு விவர அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.

அந்த விவர அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:–

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் இயல்பாக கிடைக்கும் மழை அளவான 920.9 மில்லி மீட்டரில் 711.9 மில்லி மீட்டர் மழையே கிடைக்க பெற்றுள்ளது. 2013ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெற்ற மழை அளவு 739.8 மில்லி மீட்டர் ஆகும். இது எதிர்பார்க்கப்பட்ட சராசரி ஆண்டு மழை பொழிவை விட 20% பற்றாக்குறை ஆகும். 2014ம் ஆண்டில் 14.7.2014 வரை இயல்பாக தமிழகத்திற்கு கிடைக்கும் மழை அளவான 733.7 மில்லி மீட்டரில் இதுவரை பெய்த மழை அளவு சராசரியாக 250.3 மில்லி மீட்டர் ஆகும். நீர்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

உதாரணமாக மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடியில் கடந்த ஆண்டு 10.7.2013 அன்றைய நிலவரப்படி 26 ஆயிரத்து 470 மில்லியன் கன அடியாக அணையின் நீர் இருந்தது.

இந்த ஆண்டு 10.7.2014 வரை 16 ஆயிரத்து 413 மில்லியன் கன அடி உள்ளது.

அதேபோல் பவானி சாகர் அணையின் கொள்ளளவான 32 ஆயிரத்து 800 மில்லியன் கன அடியில் கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 229 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10.7.2014 வரை 3 ஆயிரத்து 406 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவான 10 ஆயிரத்து 570 மில்லியன் கன அடியில் கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 380 மில்லியன் கன அடியாக தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10.7.2014 வரை 1 ஆயிரத்து 360 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.

அதேபோல் வைகை அணையின் கொள்ளளவான 6 ஆயிரத்து 91 மில்லியன் கன அடியில் கடந்த ஆண்டு 1 ஆயிரத்து 579 மில்லியன் கன அடியாக தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10.7.2014 வரை 230 மில்லியன் கன அடியாக உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க…

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களுக்கு 13.2.2013ல் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மற்றும் பயிர் இழப்பிற்காக 608 கோடியே 75 லட்சம் ரூபாயும், மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 25.4.2013ல் ஆயிரத்து 4 கோடியே 86 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் ரூ. 1613 கோடியே 61 லட்சம் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் தமிழக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், பயிர் இழப்புக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

20% மழை குறைபாட்டால்…

இந்த ஆண்டில் மொத்த மழை அளவில் 20 சதவீதம் மழை குறைபாடு ஏற்பட்டுள்ளதால், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்திட முழுமையாக முணைந்துள்ளது. குடிநீர் பற்றாக்குறை, கால்நடை தீவன தட்டுப்பாடு ஆகியவற்றை பற்றியும் அதை சமாளிக்க தேவையான நிதி ஆதாரங்கள் பற்றியும் முதலமைச்சரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், கால்நடைக்கான தீவன தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காகவும் ரூ.681 கோடியே 53 லட்சம் அளவிலான நிவாரண தொகுப்பை அரசு வழங்கியது. இதில் 189 கோடியே 16 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் ரூ. 492 கோடியே 37 லட்சம் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள நிதியலிருந்தும் செயல்முறையில் உள்ள திட்டங்களிலிருந்தும், ஒருங்கிணைத்து பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிதியின் மூலம் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் துறைக்கு ரூ.42.45 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்துக்கு ரூ. 13.65 கோடியும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு 50 கோடியும், நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.50.87 கோடியும், பேரூராட்சிகளுக்கு ரூ.16.19 கோடியும் மற்ற 20 மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.10 கோடியும், கால்நடை தீவன பற்றாக்குறையை போக்க கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.6 கோடியும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கும் துறைக்கு ரூ.16 கோடியே 7 லட்சமும், ஊரக வளர்ச்சித்துறை ரூ.184.13 கோடியும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கும் துறை–ஊராக வளர்ச்சித்துறைக்கு ரூ. 292 கோடியே 17 லட்சமும், குடிநீர் வழங்கலுக்காக ரூ. 492.37 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முதன்மை தொழிலான வேளாண்மை தொழிலை ஊக்குவிப்பதிலும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதிலும் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 6.6.2014 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு 19% அளவுக்கு மழை குறைவாக பெய்த போதிலும், மண் வளத்தை மேம்படுத்தியதன் மூலமும், நவீன உத்திகளை கையாண்டதன் மூலமும், தேவையான விதை, நுண்ணூட்ட சத்து, உரங்கள் ஆகியவற்றை இருப்பில் வைத்து உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்ததன் மூலமும் இதுவரை இல்லாத சாதனை அளவாக 103.38 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானிய உற்பத்தி இருக்கும் என மதிப்பிட பட்டுள்ளது. குறுவை சாகுபடியை ஊக்குவிக்க…

தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

1. கடந்த 2 ஆண்டுகளாக வழங்கியது போல் இந்த ஆண்டும் விவசாயித்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.

2. நீர் ஆதாரங்களில் வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில் ஒவ்வொருவருக்கும் 600 அடி எச்டிபிஇ குழாய்கள் 700 விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

3. டெல்டா பகுதிகளில் காவிரி நீர் பெறப்படும் போது வாய்க்கால் பாசனம் மூலம் அதிக அளவு நெல் சாகுபடி மேற்கொள்ளும் பொருட்டு 100 விழுக்காடு மானியத்தில் சமுதாய நாற்றங்கால் முன்னரே அமைத்து வாய்க்கால்களில் நீர் பெறப்படும் சமயத்தில் நடவு பணி மேற்கொள்ள ஏதுவாக நெல் நாற்றுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

4.டெல்டா பகுதிகளில் 100 விழுக்காடு மானியத்தில் நெல்நடவு யந்திரங்களை 200 விவசாயிகள் குழுக்களுக்கு வழங்கி நடவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

5. வேலையாட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் சரியான தருணத்தில் களை எடுத்து உயர் மகசூல் பெற வழிவகை செய்யும் வகையில் 100 விழுக்காடு மானியத்தில் யந்திர களை எடுக்கும் கருவிகள் 200 விவசாயி குழுக்களுக்கு வழங்கப்படும்.

6.குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் உயரிய தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் உயர் மகசூல் தரும் இடு பொருட்களான நெல், நுண்ணூட்ட கலவை, துத்தநாக சல்பேட் ஆகியவை தலா 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

7. உயிர் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் தலா 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும். இதுபோன்று 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு ஜிப்சம் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

ரூ.33 கோடி கூடுதல் செலவு

மேற்காணும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 32 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையால் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும் வழி வகை செய்யப்படும்.

மேலும் மழை நிலவரம் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறித்து அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

வரக்கூடிய மாதங்களில் மழை அளவை கண்காணித்தும், நீர்நிலை தேக்கங்களில் நீர் இருப்பு அளவை கண்காணித்தும், தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி அரசால் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்