முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவி ஆய்வாளர் கொலை: நடவடிக்கைக்கு முதல்வர் உறுதி

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.25: கடலூர் அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் உறுதியளித்துள்ளார். கடலூர் அண்ணாமலை நகர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்திரகுமார் (தே.மு.தி.க.), பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூ.), பொன்னுபாண்டி (இந்திய கம்யூ.), ரங்கராஜன் (காங்.) ஆகியோர் சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்..

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று கடலூர் அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை வருமாறு:

கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் 22.7.2014 அன்று சுமார் 23.45 மணியளவில் கோவிந்தசாமி என்பவர் ஆஜராகி, தனது மனைவியின் சகோதரி மகன் கணேசன் என்பவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்ததாகவும்; அவர் கிள்ளை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போது அவருக்கும் சிதம்பரம், அம்பலத்தாடி குப்பத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்த வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும்; வனிதா, கணேசனை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவனை விவாகரத்து செய்ததாகவும்; கணேசனுக்கு அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால், கடந்த 9.7.2014 அன்று உறவு பெண்ணான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும்; இதனால் ஆத்திரமுற்ற வனிதா கணேசனை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும்; சம்பவத்தன்று இரவு சத்யா தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கணேசனை தொடர்பு கொள்ள முடியாததால் நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்ததை அடுத்து, தனது மகனுடன் கணேசன் தங்கியிருந்த வீட்டிற்கு தான் சென்றதாகவும்; அப்போது வனிதா வீட்டைப் பூட்டிவிட்டு அவசர அவசரமாக சென்றதாகவும்; ஜன்னல் வழியாக பார்த்த போது கணேசன் கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும்; பின்னர் தாங்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும்; உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும்; வனிதா அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு, வனிதாவை தேடிச் சென்று, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் கைது செய்து விசாரித்த போது, அவர், கணேசன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், தனது கணவரிடமிருந்து தான் விவாகரத்து பெற்றதாகவும், பின்னர் கணேசன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து, தனது வாழ்க்கையைக் கெடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். காவல் துறையினர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் கைப்பற்றினர்.

அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 31 வயதான கணேசன், கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டவர். இவர், 18.6.2014 முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 9.7.2014 அன்று இவருக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

காவல் துறையினர் இதுவரை மேற்கொண்ட விசாரணையில், கணேசனுக்கும், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த வனிதாவிற்கும் தொடர்பு இருந்து வந்ததும், கணேசனை திருமணம் செய்து கொள்ள வனிதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளதும் தெரிய வந்தது. மேலும், கணேசனுக்கு திருமணம் ஆனதை அறிந்து ஆத்திரமுற்ற வனிதா, அவரை சம்பவத்தன்று ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. கடலூர் அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்