முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1006 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: முதல்வர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 13 – நடப்பு ஆண்டில் மேலும் 6 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதற்காக அரசு மான்யம் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி-110ன் கீழ்முதல்வர் ஜெயலலிதாநேற்றுஒரு அறிக்கை வாசித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத் திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பதிலும், வழிபாடுகளை நடத்துவதிலும், அன்னதானம் உட்பட இறையன்பர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இறையன்பர்களின் வசதிகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் உள்ள தொன்மையான ஓவியங்களை பழமை மாறாது புதுப்பிக்கும் வகையில், தொல்லியல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று எனது தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த மதிப்பீட்டின்படி, திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்தில் உள்ள பழமையான சுவரோவியங்களை 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்துப் பராமரிக்கப்படும்.

2002 ம் ஆண்டு என்னால் துவக்கி வைக்கப்பட்ட திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 518 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், ஆன்றோர்கள், சான்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 13.9.2012 அன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு பெரும் பயனளிக்கும் இத்திட்டம், நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

3 ஆண்டில் 5351 கோவில்களுக்கு

கும்பாபிஷேகம்

இந்து சமய திருக்கோயில்களை ஆகம விதியின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 5351 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்பட்டது.

நடப்பு ஆண்டில் மேலும் 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்படும். இதற்கென அரசு மானியமாக 6 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் சரியான பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து இருப்பதை அறிந்த எனது தலைமையிலான

அரசு, கடந்த 3 ஆண்டுகளில், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள 1,630 திருக்கோயில்களை சீரமைக்க, ஒரு திருக்கோயிலுக்கு 50,000 ரூபாய் வீதம் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி, அதன் மூலம் அத்திருக்கோயில்கள் பயனடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 – ரூபாய் வீதம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும்.

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறிய திருக்கோயில்கள் நிதி வசதியின்மையால் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாது சிதிலம் அடைந்துள்ளதை அறிந்த எனது தலைமையிலான அரசு, திருப்பணிக்கான உதவியை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியதோடு, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 1,262 திருக்கோயில்களுக்கு 6 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000- ரூபாய் வீதம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

சமையல் அறையுடன்

அன்னதானக் கூடம்

அன்னதானம் அருந்தும் பக்தர்கள் வசதிக்கென அன்னதானக் கூடம் இல்லாத திருக்கோயில்களில் சமையல் அறையுடன் கூடிய அன்னதானக் கூடம் அமைத்தல், அங்கு பக்தர்கள் வசதியுடன் அமர்ந்து உணவருந்த தேவையான மேஜை நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 23 அன்னதானக் கூடங்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 29 அன்னதானக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 16 திருக்கோயில்களில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

திருக்கோயில்களில் ஒரு கால பூஜையேனும் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு கால பூஜைத் திட்டத்தை சீரமைத்து இன்று 11,931 கிராமப்புறத் திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள சிறு சிறு திருக்கோயில்கள் உட்பட சிறு சிறு கிராமப்புறத் திருக்கோயில்களிலும், நாள்தோறும் முறையாக பூஜை நடைபெறுவதற்கு தேவையான பூஜை உபகரணங்கள் இல்லை என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட 10,000 சிறு சிறுத் திருக்கோயில்களுக்கு முறையான பூஜை செய்திட ஏதுவாக, பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியவை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புனரமைத்து புதுப்பிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளில் 186 திருக்கோயில்களுக்கு 67 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வாண்டு மேலும் 68 தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புனரமைத்து புதுப்பிக்க 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் பக்தர்கள் தங்கும் விடுதி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பழம் பெருமை வாய்ந்ததும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குவதுமான ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கி வழிபடுவதற்கும், சுற்றுலாப் பயணிகள் தங்கி செல்லவும் போதுமான தங்கும் வசதி இத்தலத்தில் இல்லை என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

கும்பகோணம் 69 கோவில்களில்

ரூ.12 கோடியில் பணிகள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் நகரில் அமைந்துள்ள மகாமகத் திருக்குளத்தில் மகாமகப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இப்பெருவிழா 2016ம் ஆண்டு பிப்ரவரி 13ம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 22ம் நாள் நிறைவு பெறும். இம்மகாமகப் பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகர் பகுதியில் அமைந்துள்ள 86 திருக்கோயில்களில் நல்ல நிலையில் உள்ள 17 திருக்கோயில்கள் தவிர எஞ்சிய 69 திருக்கோயில்கள் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செப்பனிட்டுப் பாதுகாக்கப்படும்.

திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் என்னால் துவக்கி வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதானம் வழங்கும் பணிகளில் சமையல் செய்பவர், உதவியாளர், துப்புரவாளர் என்ற நிலைகளில் 673 நபர்கள் தினக்கூலி அடிப்படையிலும், 147 நபர்கள் தொகுப்பூதிய அடிப்படையிலும் மொத்தம் 820 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில், அந்தந்த திருக்கோயில்களுக்கு உரிய சம்பள விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து அவர்களுடைய பணி வரன்முறை செய்யப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 7 கோடியே 89 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள் நிருவாகத்தில் 490 இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களில் மொத்தம் 869 பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களில் 65 பணியிடங்களுக்கு முதல்நிலைத் திருக்கோயில் பணியாளர்களுக்கான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. எஞ்சிய 804 பணியிடங்கள் சில்லரை செலவின பணியிடங்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. இச்சில்லரை செலவினப் பணியிடங்களில் 356 பணியாளர்கள் மட்டும் சாந்தி அதாவது அர்ச்சகர், காவலர், தவில், வாத்தியம், கொத்தன், சுருதி, மாலைக்கட்டு போன்ற அத்தியாவசிய பணியிடங்களில் சம்பள விகிதத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 294 சில்லரை செலவின பணியிடங்களில் மேற்கண்ட பதவிகளில் தினக்கூலி 40 – ரூபாய் என்ற அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்களது பணி, தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகித முறையில் வரன்முறை செய்யப்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு 46 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மேலும், காலியாக உள்ள 154 பணியிடங்கள் தகுதி உடையோரைக் கொண்டு ஊதிய விகித அடிப்படையில் உடனடியாக நிரப்பப்படும்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஆண்டு வருமான அடிப்படையில் பல்வேறு நிலைகளில் உள்ள திருக்கோயில்களில் பல ஆண்டுகளாக ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8,184 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை சீரமைத்திட தங்கள் பணியினை ஊதிய விகித அடிப்படையில் வரன்முறைப்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 8,184 பணியாளர்களுக்கு தகுதி மற்றும் நன்னடத்தை அடிப்படையில் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களது பணி வரன்முறை செய்யப்படும். இதனால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 44 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகளினால், திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் கூடுதல் வசதியைப் பெறவும், திருக்கோயில் பணியாளர்கள் கூடுதல் சலுகைகளை பெறவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்