முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு அமைச்சர்கள் - நிர்வாகிகள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக. 30 – அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 7–வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமை கழகத்தில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என ஏராளமானபேர் மகிழ்ச்சியுடன் மலர்கொத்து வழங்கினார்கள்.

தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

அ.தி.மு.க. சட்ட திட்ட விதிப்படி 5 ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி இந்த தேர்தலை நடத்த கழக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 20–ந்தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டது. முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 20–ந்தேதி அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை நிதி, பொதுப்பணித்துறை அமைச்சரும், அண்ணா தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் வழிமொழிந்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து அமைச்சர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானபேர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக வேட்புமனு கொடுத்தார்கள். தினசரி ஏராளமான பேர் வேட்புமனுக்களை கொடுத்தார்கள். ஜெயலலிதாவுக்காக வேட்புமனுக்கள் குவிந்தன.

முதலமைச்சர் ஜெயலலிதா பொதுச் செயலாளராக 2,467 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் 6 கோடியே 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினார்கள்.

இன்று சென்னை தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முறைப்படி தேர்தல் ஆணையாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் அறிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மதியம் 12–03 மணிக்கு அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விண்ணை பிளக்கும் வகையில் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

தொண்டர்கள் சாலையின் இருபக்கமும் மற்றும் தலைமை கழகம் முன்பும் வெள்ளமென திரண்டிருந்தார்கள். முதலமைச்சரின் கார் தொண்டர்களின் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து வந்தது.

அ தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதாவை அ தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள் வரவேற்றார்கள்.

பின்னர் அமைப்பு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஜெயலலிதா அ தி.மு.க. பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முறைப்படி அறிவித்தார்.

விசாலாட்சி நெடுஞ்செழியன் கூறியதாவது:–

அ தி.மு.க. பொதுச் செயலாளர்( பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19.8.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள் 20.8.2014 முதல் 24.8.2014 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டது. மொத்தம் 2467 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் கழக சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது.

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் அனைத்து அடிப்படைப் பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்ற கழக சட்ட திட்ட விதி 20, பிரிவு – 2ன்படி, முதலமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, கழகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சியோடு அறிவிக்கப்படுகிறது என்று விசாலாட்சி நெடுஞ்செழியன் அறிவித்தார்.

பின்னர் 7–வது முறையாக பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை ஜெயலலிதாவிடம் விசாலாட்சி நெடுஞ்செழியன் வழங்கினார். சான்றிதழை கொடுத்தபோது அங்கிருந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் ‘புரட்சித்தலைவி வாழ்க’, ‘கழக நிரந்தர பொதுச் செயலாளர் வாழ்க’ என வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் அமைச்சர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் பூங்கொத்துக்களை வழங்கினார்கள். பூங்கொத்துக்கள் குவிந்தன.

அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் ராட்சத மாலையை ஜெயலலிதாவுக்கு அணிவித்தார்கள்.

மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்க கொடிகளுடன் நின்று உற்சாகமாக வரவேற்றார்கள்.

தொண்டர்கள் கட்சி கொடி கலரில் ஏராளமான பலூன்களை வைத்திருந்தார்கள்.

ஜெயலலிதா தேர்ந்தெ டுக்கப்பட்டதை அறிவித்ததும் தலைமை கழகம் முன்பு பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி கொண்டே இருந்தார்கள். எங்கும் எழுச்சி உற்சாகம் காணப்பட்டது.

தலைமை கழகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா மனோகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், குடிசை மாற்று வாரிய தலைவர் கு.தங்கமுத்து, அமைப்பு செயலாளர்கள் பி.எச்.பாண்டியன், பொன்னையன், ஆதிராஜாராம், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி., விருகை ரவி, என்.தளவாய்சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.கந்தன், கே.குப்பன், எம்.கே.அசோக், ராஜபாளையம் கோபால்சாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், மேயர் சைதை துரைசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, தென் சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டிக்கர் ரவி, தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சைதை என்.வைத்தியநாதன், கேபிள் டி.வி. நிறுவன தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் நுங்கை மாறன், வி.கே.பாபு, வெங்கடேசன், ஏழுமலை, கவுன்சிலர்கள் பி.சின்னையன், வீடியோ சரவணன், டி.சிவராஜ், வடசென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் அஞ்சுலட்சுமி, வேளாங்கண்ணி, மயிலை ராஜேஷ் கண்ணா உட்பட ஏராளமானபேர் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்