முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மாநாட்டில் பா.ஜ பங்கேற்பதா? வைகோ கண்டனம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 - இலங்கையில் நடைபெறும் ஆசிய அரசியல் மாநாட்டில் பாரதீய ஜனதா பங்கேற்பது கண்டனத்திற்குரியது என்று வைகோ கூறியுள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவுஇரக்கம்இன்றி படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர். ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று, ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாட்டில், பாரதீய ஜனதா கட்சி பங்கேற்பது, தாய்த்தமிழகத்திலும், ஈழத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுகின்ற அக்கிரமம் ஆகும்.

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ராணுவ உதவிகள் செய்து துரோகம் இழைத்தது. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தபோது, அதில் இந்தியா பங்கு ஏற்கக்கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டதால், அதில் பங்கு ஏற்க இருந்த இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக்கொண்டார்.

ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் மரணத்தீயை அணைத்து உயிர்த்தியாகம் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வேதனையும், துயரத்தையும் துச்சமாக எண்ணி, கிள்ளுக்கீரையாகக் கருதி, பாரதீய ஜனதா கட்சி கொழும்புக்கு அக்கட்சியின் தேசியச்செயலாளர் முரளிதரராவ், அக்கட்சியின் அயலக உறவுகளுக்கான அமைப்பாளர் விஜய் ஜோலி ஆகியோரைப் பங்கு ஏற்க அனுப்பி இருப்பது மன்னிக்க முடியாத துரோகம். மாநாட்டில் பங்கு ஏற்காமல் உடனடியாக அவர்களை இந்தியாவுக்குத் திரும்ப அழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ ராஜபக்சே நடத்துகின்ற ஒரு அரசியல் மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சி பங்கேற்பதற்கு ம.தி.மு.க. சார்பில் வன்மையான கண்டனத்தைத்தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்