முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்களில் சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 1:

ஓடும் ரயில்களில் சுத்தம் செய்வதற்காக விரைவில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி தெரிவித்தார்.

காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை 2ம் தேதி இந்தியாவை சுத்தமாக்குவோம் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கவுள்ளார். இதில் அனைத்து ஊழியர்களும் தங்கள் உடல் உழைப்பை செலுத்த வேண்டியது அவசியம். அன்றைய தினம் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவுரையின்படி ரயில்வே ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். மதுரை கோட்ட ரயில்வேயில் இத்திட்டம் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கோட்டத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இதில் பங்கேற்று சுத்தம் செய்யும் பணிகளை செய்வர்.

ரயில் நிலையம், ரயில்கள், ரயில் பாதைகள் சுத்தம் செய்யப்படும். மதுரையில் கோட்ட அலுவலகம், ரயில் நிலையம், ரயில்வே காலனி உள்ளிட்ட இடங்களில் இந்த பணி மேற்கொள்ளப்படும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் பணி நடைபெறும். துப்புரவு பணிக்கான துடைப்பங்கள், தொப்பிகள், கையுறைகள் போதுமான அளவில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுத்தமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வை பேரணிகள் நடத்தப்படும். கோட்ட ரயில்வே மகளிர் நலச்சங்க பள்ளி மற்றும் ரயில்வே மருத்துவமனைகளில் இருந்து பேரணிகள் தொடங்கும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மதுரை கோட்டத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்த உள்ளோம். இதற்காக மறு சுழற்சி செய்யும் கருவி நிறுவப்படவுள்ளது. மேலும் அனைத்து ரயில்களையும் சீரான முறையில் சுத்தம் செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஓடும் ரயில்களில் ஏற்படும் குப்பை கழிவுகளை அகற்றி பெட்டிகளை தூய்மைப்படுத்தும் வகையில் ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

ராமேஸ்வரம் ஓகா விரைவு ரயில், மதுரை புதுடெல்லி சம்பர்க்கிராந்தி ரயில் உள்ளிட்ட  4 ரயில்களில் இதற்கான ஊழியர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார். கோட்ட கூடுதல் மேலாளர் பாபு, கோட்ட மருத்துவ கண்காணிப்பாளர் சாகூ  உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்